Published : 12 May 2015 09:11 AM
Last Updated : 12 May 2015 09:11 AM

க.அன்பழகன் மேல்முறையீடு செய்யலாம்: மூத்த வழக்கறிஞர்கள் கருத்து

ஜெயலலிதா உட்பட 4 பேர் விடுதலையை எதிர்த்து திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய உரிமை உள்ளது என்று மூத்த வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அம்மாநில அரசு மேல்முறையீடு செய்யலாம். மற்றவர்களுக்கும் அந்த உரிமை இருக்கிறது என்று கூறப்படுகிறது.

மேல்முறையீட்டு வழக்கில் பவானி சிங் நியமனத்தை எதிர்த்து திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தார். அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், பவானி சிங் நியமனம் செல்லாது என்று தீர்ப்பளித்தது. அதையடுத்து இவ்வழக்கில் அரசு வழக்கறிஞராக ஆச்சார்யா நியமிக்கப்பட்டார்.

தற்போது இவ்வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், தமது தரப்பு வாதங்களை உயர் நீதிமன்றம் சரியாகப் பரிசீலிக்கவில்லை என்று கர்நாடக அரசுக்கு ஆச்சார்யா தகவல் தெரிவிக்கலாம். அதை அரசு ஏற்றுக் கொண்டால், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்படும். ஒருவேளை கர்நாடக அரசு தாக்கல் செய்யாவிட்டால், மற்றவர்கள் மேல்முறையீடு மனு தாக்கல் செய்ய உரிமை உள்ளது என்று வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து மத்திய அரசு மூத்த வழக்கறிஞர் ரபுமனோகர் கூறும்போது, ‘‘தீர்ப்பு நகல் கிடைத்த 90 நாட்களுக்குள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யலாம். அந்த மனுவை கர்நாடக அரசு தாக்கல் செய்யலாம். அதுபோல திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனுக்கும் மேல்முறையீடு செய்ய உரிமை இருக்கிறது’’ என்றார்.

சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் கூறும்போது, ‘‘திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், இவ்வழக்கில் ஆரம்பத்தில் இருந்தே தொடர்புடையவராக இருக்கிறார். மேல்முறையீட்டு வழக்கில் 400-க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட வாதங்களை அவர் முன்வைத்திருக்கிறார்.

பொதுவாக வழக்குகளில் விரும்புபவர்கள் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய சில தீர்ப்புகளில் குறிப்பிடப் பட்டுள்ளது. அந்த அடிப்படையில், திமுக பொதுச் செயலாளர் தனது தரப்பு வாதத்தை முன்வைக்கும் வகையில் மேல்முறையீடு செய்ய சட்டப்படி அவருக்கு உரிமை இருக்கிறது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x