

சென்னை மாநகராட்சி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள ‘அம்மா மாளிகை’ என்ற புதிய அலுவலக கட்டிடம் விரைவில் திறக்கப்படுமா என்று மாநகராட்சி நிர்வாகம் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது.
சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம் செயல்பட்டுவரும் ரிப்பன் மாளிகையில் இடப்பற்றாக் குறை காரணமாக சுகாதாரத் துறை, கல்வித் துறை, பூங்கா துறை, மின்சாரத் துறை உள்ளிட்ட பல துறைகள் அதே வளாகத்தில் உள்ள தனித்தனி கட்டிடங்களில் இயங்கி வருகின்றன. இந்நிலையில் ரிப்பன் மாளிகையின் பின்புறம் தரைத்தளம் மற்றும் 6 தளங்கள் கொண்ட இணைப்புக் கட்டிடம் கடந்த 2009-ம் ஆண்டுமுதல் கட்டப்பட்டு வந்தது.
புதிய கட்டிடத்தில் இந்த துறை கள் அனைத்தும் ஒரே இடத்தில் இயங்க வசதி அளிக்கப்படும். இந்த கட்டிடம் 1.50 லட்சம் சதுர அடி பரப்பளவில் சுமார் ரூ.33 கோடி செலவில் கட்டப்பட்டது. ஒரு கலையரங்கமும், கலந்தாய்வுக் கூடமும் இதில் உள்ளன. இங்கு 45 கார்கள், 100 இரு சக்கர வாகனங்களை நிறுத்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் 100 ஆண்டு பழமை யான ரிப்பன் கட்டிடத்தின் பாரம் பரிய அம்சங்களை சிதைக்காமல் இருக்கவும் புதிய கட்டிடம் அவசியமாகிறது. நிர்வாகம் புதிய கட்டிடத்துக்கு மாற்றப்பட்ட பிறகு, ரிப்பன் மாளிகையின் ஒரு தளத்தில் அருங்காட்சியகம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய கட்டிடத்துக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ‘அம்மா மாளிகை’ என்று பெயர் சூட்டி, விரைவில் திறக்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்தது. ‘அம்மா மாளிகை’யில் கிட்டத்தட்ட அனைத்து பணிகளும் கடந்த டிசம்பர் மாத இறுதியில் முடிந்து விட்டன. இந்நிலையில் தற்போது ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வர் ஆவார் என்று எதிர்பார்க் கப்படும் வேளையில் ‘அம்மா மாளிகை’ விரைவில் திறக்கப் படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவு கிறது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி கூறும்போது, “புதிய கட்டிடத்தில் மேஜை, நாற்காலிகள் போடும் பணி நடைபெற்று வருகின் றன. இவை தவிர அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன. மேயர், ஆணையர், துணை ஆணை யர்கள் மட்டும் ரிப்பன் கட்டிடத் தில் இருந்து செயல்படுவார் கள். ‘அம்மா மாளிகை’ திறப்பதற்கான நிர்வாக ஒப்புத லுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள் ளது” என்றார்.