

புதுக்கோட்டை, மணப்பாறை மற்றும் கடலூர் அருகே நேரிட்ட இருவேறு விபத்துகளில் 5 பக்தர்கள் உட்பட 10 பேர் பலியாகினர்.
புதுக்கோட்டை அருகே கடையக்குடியில் உள்ள பிரசன்ன ரகுநாத பெருமாள் கோயிலில் மே 3-ம் தேதி சித்ரா பவுர்ணமியையொட்டி திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள், புதுக்கோட்டை வரதராஜ பெருமாள், கடையக்குடி பிரசன்ன ரகுநாத பெருமாள் ஆகிய சுவாமிகளின் வீதியுலா நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் நடைபெற்ற தீர்த்தவாரிக்குப் பின் அந்தந்த கோயில்களுக்கு சுவாமிகள் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டன.
கடையக்குடியில் இருந்து திருமயத்துக்கு சத்தியமூர்த்தி பெருமாள் சுவாமியை மாடு பூட்டிய சப்பரத்தில் வைத்து எடுத்துக்கொண்டு கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் சென்று கொண்டிருந்தனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு புதுக்கோட்டை- காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் திருமயம் பிரிவு சாலை அருகே அவர்கள் சென்றபோது, அவ்வழியே சென்ற மணல் லாரி பக்தர்களின் கூட்டத்துக்குள் திடீரென புகுந்து, சப்பரத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில், திருமயம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த எஸ்.தட்சிணாமூர்த்தி(45), மு.ராஜேஸ்வரி(65), சத்தியமூர்த்தி நகர் எம்.தேவி(40), நமணசமுத்திரத்தைச் சேர்ந்த பி.தவசி(65), குழிபிறையைச் சேர்ந்த எஸ்.லட்சுமி(45) ஆகியோர் படுகாயமடைந்து, அந்த இடத்திலேயே இறந்தனர். சப்பரம் நொறுங்கியது, அதை இழுத்துச்சென்ற மாடும் பலியானது.
மேலும், இருதயபுரம் பார்த்தசாரதி(18), திருமயம் எஸ்.ராமு(48) உட்பட 9 பேர் காயமடைந்தனர். இவர்கள் திருமயம் மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த திருமயம் போலீஸார் லாரி ஓட்டுநரான மதுரை ராம் நகரைச் சேர்ந்த க.செல்வராஜை(26) கைது செய்தனர்.
மணப்பாறை அருகே…
திருச்சி மாவட்டம் முசிறியில் இருந்து சிவகங்கைக்கு மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரியை சிவகங்கையைச் சேர்ந்த கண்ணன் ஓட்டிச் சென்றார். லாரி திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறையை அடுத்துள்ள கல்லாமேடு பகுதி அருகே நேற்று அதிகாலை வந்தபோது அதிகாலை 3 மணியளவில் முன்பக்க டயர் வெடித்ததால், மேற்கொண்டு செல்ல முடியாமல் சாலையிலேயே நிறுத்தப்பட்டது. டயரை மாற்றுவதற்கான வேலையில் கண்ணன் ஈடுபட்டிருந்தார்.
அப்போது இந்த சாலையில் சென்னையில் இருந்து தூத்துக்குடி நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்தை ஓட்டுநர் ராஜா முகம்மது ஓட்டிச் சென்றார். சாலையில் லாரி பழுதாகி நிற்பதை அவர் அறியாததால் வேகமாக வந்த பேருந்து, லாரியின் பின்புறத்தில் மோதியது.
இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் கண்ணன், ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் மதுரை ராஜா முகம்மது, கொடை ரோடு பகுதியைச் சேர்ந்த பெருமாள்(40) ஆகியோர் அதே இடத்தில் இறந்தனர்.
பேருந்தில் பயணம் செய்த சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ்(45), இவரது மனைவி ஸ்வர்ணஹேமா(40), மகள் சரண்யா(13), கார்த்திகேயன்(11), சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தியின் தாய் பாப்பா(65), மனைவி ஜெயந்தி(34), மகன்கள் சஞ்சய்(14), சுதர்சன்(12), மற்றொரு பெண் வைஷாலி(11) உள்ளிட்ட 34 பேர் காயமடைந்து மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் 4 பேர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக வளநாடு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விபத்து காரணமாக திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்துக்கு போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.
கடலூர் அருகே 2 பேர் பலி
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே நிலை தடுமாறிய கார் மீது லாரி மோதி 2 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்தவர் சரண்ராஜ் (35). இவரது நண்பர்கள் பங்கஜ்குமார் (38), சுபாஷ் (35), மேஷக் (38). இவர்கள் 4 பேரும் நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை காண காரில் சென்றுள்ளனர். போட்டி முடிந்த பிறகு, நள்ளிரவில் மீண்டும் ஊருக்கு காரில் புறப்பட்டனர். காரை சுபாஷ் ஓட்டினார்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள சேப்பாக்கம் மேம்பாலத்தில் நேற்று காலை கார் வந்தபோது, திடீரென கார் நிலை தடுமாறி, பின்னால் வந்த லாரி மோதியதில் சரண்ராஜ், பங்கஜ்குமார் இருவரும் உயிரிழந்தனர். சுபாஷ், மேஷக் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வேப்பூர் போலீஸார் காயமடைந்த 2 பேரையும் சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சரண்ராஜ், பங்கஜ் குமார் ஆகியோரின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.