

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான பூர்த்தி செய்யப்பட்ட 31,332 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 2,555 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 100 பிடிஎஸ் இடங்கள் இருக்கின்றன. இவற்றில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீதம் இடங்கள் போக, மீதமுள்ள 85 சதவீதம் இடங்கள் மாநில அரசுக்கு உள்ளது.
இந்நிலையில் 2015-16-ம் கல்வியாண்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் அனைத்து கல்லூரிகளிலும் கடந்த 11-ம் தேதி தொடங்கியது. கடைசி நாளான நேற்று மாலை 5 மணி வரை 35,667 விண்ணப்பங்கள் விற்பனையாகின. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்று கடைசி நாள். அதன்படி இன்று மாலை 5 மணி வரை 31,332 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
இது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்ககம் (டிஎம்இ) அதிகாரிகள் கூறும்போது, “கடந்த ஆண்டு 30,380 விண்ணப்பங்கள் விற்பனையாகின. இவற்றில் பூர்த்தி செய்யப்பட்ட 28,053 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இந்த ஆண்டு விண்ணப்ப விற்பனையும், விண்ணப்பம் சமர்ப்பிப்பும் அதிகம். தபாலில் விண்ணப்பங்கள் வந்து கொண்டிருக்கின்றன. தரவரிசைப் பட்டியலை ஜூன் 12-ம் தேதி வெளியிடவும், முதல் கட்ட கவுன்சலிங்கை ஜூன் 19-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடத்தவும் திட்டமிட்டு இருக்கிறோம்” என்றார்.