

வேலூரில் குழந்தைத் தொழிலாளியாக மீட்கப்பட்ட மாணவி, பிளஸ் 2 தேர்வில் 909 மதிப்பெண் பெற்றுள்ளார்.
வேலூர் கொணவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் நஜிமா. இவரது தந்தை அப்துல் வஹாப். தாய் மும்தாஜ். கடந்த 2005-ம் ஆண்டு குழந்தைத் தொழிலாளியாக மீட்கப்பட்ட நஜிமா, கொணவட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தார். தற்போது, பிளஸ் 2 தேர்வில் 909 மதிப்பெண் பெற்றுள்ளார்.
இவர் பெற்ற மதிப்பெண் விவரம்: தமிழ்-177, ஆங்கிலம்-159, இயற்பியல்-156, வேதியியல்-147, கணிதம்-140, உயிரியல்-130.
குழந்தைத் தொழிலாளியாக மீட்கப்பட்டு இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வெழுதிய 19 பேரில் 15 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் நஜிமா முதலிடம் பெற்றுள்ளார்.
இதுகுறித்து, நஜிமா கூறும்போது, ‘‘எனது தந்தை அப்துல் வஹாப், தாய் மும்தாஜ் இருவரும் வீட்டிலேயே சிறிய அளவில் டிபன் கடை நடத்தி வருகின்றனர். 3 சகோதரிகள், 1 தம்பி உள்ளனர். குடும்ப வறுமை காரணமாக 5 வயதில் இருந்தே வீட்டுக்கு அருகில் பீடி சுற்றும் வேலையில் ஈடுபட்டேன்.
2005-ம் ஆண்டு குழந்தைத் தொழிலாளியாக மீட்கப்பட்டு பள்ளியில் சேர்க்கப்பட்டேன். 2007-ம் ஆண்டு கொணவட்டம் அரசுப் பள்ளியில் சேர்ந்து இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளேன்.
எனது சகோதரி கவுசர் என்பவரும் குழந்தைத் தொழிலாளியாக மீட்கப்பட்டார். பிளஸ் 2 தேர்வில் 987 மதிப்பெண் பெற்ற அவர், தற்போது பொறியியல் படிப்பு முடித்து வேலைக்கு முயற்சி செய்து வருகிறார். எனக்கு ஃபேஷன் டெக்னாலஜி படிக்க விருப்பம். சகோதரியின் ஆலோசனையுடன் கல்லூரியில் சேருவேன்’’ என்றார்.