

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் தனிச் செயலாளர் வெற்றிச்செல்வன், 6 பேர் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
சென்னை மடிப்பாக்கம் மூவரசன்பட்டு சபாபதி நகர் 2-வது தெருவில் வசித்து வந்தவர் வெற்றிச்செல்வன் (44). விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் தனிச் செயலாளராக இருந்த இவர், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்துவந்தார். மூவரசன்பட்டு ராகவா நகரில் ‘தாய் மண்’ என்ற பெயரில் அலுவலகம் வைத்துள்ளார்.
தினமும் காலையில் வீட்டில் இருந்து அலுவலகம் வரை வெற்றிச் செல்வன் நடைபயிற்சி செல்வது வழக்கம். ஆனால், நேற்று நடைபயிற்சி செய்யாமல் காரில் அலுவலகத்துக்கு புறப்பட்டார். வழியில் ஒரு கடையில் டீ குடித்து விட்டு, மீண்டும் காரில் ஏறி அலுவலகம் வந்து கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டியுள்ளார்.
சிறிது தூரம் சென்றதும் வேகமாக வந்த மற்றொரு கார், வெற்றிச்செல்வனின் காரை வழிமறித்து நின்றது. அதி லிருந்து 4 பேர் அரிவாளுடன் இறங்கி வெற்றிச்செல்வனின் காரை நோக்கி ஓடினர். அதே நேரத்தில் பைக்குகளில் வந்த இருவர், அவர்களுடன் சேர்ந்து கொண்டனர். 6 பேரும் காரை சூழ்ந்துகொண்டு கண்ணாடியை உடைத்து வெற்றிச்செல்வனை வெட்ட முயன்றனர்.
பதற்றமடைந்த அவர், காரில் இருந்து குதித்து தப்பி ஓடினார். அப்போது, கும்பலில் இருந்த சிலர், கற்களை எடுத்து வெற்றிச்செல்வன் மீது விசினர். ஒருவன் மட்டும் வேகமாக ஓடிச்சென்று வெற்றிச்செல்வனின் காலில் வெட்டினான். மேற்கொண்டு ஓட முடியாத வெற்றிச்செல்வன், அருகே இருந்த ஒரு கேட்டரிங் கடைக்குள் நுழைந்தார்.
அவரை விரட்டியபடி அரிவாளுடன் நுழைந்த கும்பலைப் பார்த்து அங்கே சமையல் செய்து கொண்டிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். வெற்றிச்செல்வனை அந்த கும்பல் சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டியது. கழுத்து, தலையில் பல வெட்டுகள் விழுந்ததில் மூளை வெளியே வந்து, வெற்றிச்செல்வன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். தப்பிக்க வழியில்லாமல் பயத்துடன் கொலையை பார்த்துக் கொண்டிருந்த சமையல்காரர் ஒருவரையும் அந்த கும்பல் வெட்டியது. இதில் அவருக்கு கையில் மட்டும் வெட்டுக்காயம் ஏற்பட்டது.
வெற்றிச்செல்வன் இறந்ததை உறுதி செய்துகொண்ட பிறகு 6 பேரும் காரில் தப்பி விட்டனர். அவர்கள் வந்த 2 பைக்கு களை அங்கேயே விட்டுச் சென்றனர். தகவல் அறிந்ததும் வெற்றிச்செல்வனின் ஆதரவாளர்கள் ஓடிவந்து அவரை மீட்டு அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மடிப்பாக்கம் போலீஸார், வெற்றிச் செல்வனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம் பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர்.
வெற்றிச்செல்வனின் ஆதரவாளர்களும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் திரண்டு மடிப்பாக்கம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். கொலையாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தி கலைந்துபோகச் செய்தனர்.
அதேபோல குரோம்பேட்டை மருத்துவமனை அருகே ஜிஎஸ்டி சாலையில் வெற்றிச்செல்வனின் உறவினர்கள் மறியல் செய்தனர். அவர்களையும் போலீஸார் சமாதானப்படுத்தினர்.
சொத்துப் பிரச்சினையில் கொலை
கொலைக்கான காரணம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வெற்றிச்செல்வனுக்கும், நீலாங்கரையில் உள்ள அவரது அண்ணன் மகன் ஜெகன்நாதன் (36) என்பவருக்கும் சொத்துப் பிரச்சினை இருந்து வந்தது. இருவரும் அடிக்கடி மோதலில் ஈடுபட்டுள்ளனர். 2 நாட்களுக்கு முன்புகூட இருவரும் மோதிக் கொண்டதாக தெரிகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த ஜெகன்நாதன் கூலிப்படையுடன் வந்து இந்தக் கொலையை செய்திருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலைக்கு வேறேதேனும் காரணங்கள் இருக்கிறதா என்றும் விசாரித்து வருகிறோம். கொலையாளிகளைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப் பட்டுள்ளன. கொலையாளிகள், தாங்கள் பயன்படுத்திய காரை தி.நகரில் நிறுத்திவிட்டுச் சென்றுள்ளனர். அந்தக் காரை சோதனை செய்தபோது நாட்டு வெடிகுண்டுகள், அரிவாள் போன்ற ஆயுதங்கள் இருந்தன. கொலையாளிகள் வெளியூர் தப்பிச் செல்லாமல் தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளோம்.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
கொலை செய்யப்பட்ட வெற்றிச்செல்வனுக்கு லாரா என்ற மனைவியும், மருத்துவம் படிக்கும் பிரீத்தி (22) என்ற மகளும், பொறியியல் படிக்கும் பிரவீண் (20) என்ற மகனும் உள்ளனர்.