

வேலூர் விஐடி பல்கலைக் கழகத்தில் பி.டெக். பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் ஏப்ரல் 8-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை நடந்தது. 112 நகரங்களில் 134 மையங்களில் ஆன்லைன் முறையில் நடந்த இந்தத் தேர்வில் 2 லட்சத்து 2 ஆயிரத்து 406 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
நுழைவுத் தேர்வு முடிவுகளை வேந்தர் ஜி.விசுவநாதன் நேற்று வெளியிட்டார். தேர்வு முடிவுகளை www.vit.ac.in, www.schools9.com, www.indiaresults.com, www.minglebox.com, www.shiksha.com, www.bharathedu.com, www.examresults.net, www.careers360.com ஆகிய இணையதளங்களில் தெரிந்துகொள்ளலாம்.
தேர்வு முடிவுகள் குறித்து வேந்தர் ஜி.விசுவநாதன் கூறும் போது, ‘‘நுழைவுத் தேர்வில் தெலங்கானா மாணவர் கார்த்தி கேய சர்மா முதலிடம் பெற்றுள் ளார். ரேங்க் அடிப்படையில் விஐடி வேலூர் மற்றும் விஐடி சென்னை வளாகத்தில் ஒரே நேரத்தில் கவுன்சலிங் நடத்தப் படும். 1 முதல் 8,000 ரேங்க் பெற்றவர்களுக்கு மே 11-ம் தேதி கவுன்சலிங் தொடங்கும். 8,001 முதல் 12,000 ரேங்க் வரை மே 12-ம் தேதி, 12,001 முதல் 16,000 ரேங்க் வரை மே 13-ம் தேதி, 16,001 முதல் 20,000 ரேங்க் வரை மே 16-ம் தேதி நடைபெறும்.
மாநில கல்வி வாரியம் மற்றும் மத்திய கல்வி வாரியத்தால் நடத்தப்பட்ட பிளஸ் 2 தேர்வுகளில் மாநில அளவில் முதலிடம் பெற்றவர்களுக்கு 100 சதவீதம் கல்விக் கட்டண சலுகை அளிக்கப்படும்.
விஐடி நுழைவுத் தேர்வில் 1 முதல் 50 ரேங்க் பெற்றவர்களுக்கு 75 சதவீதம் கட்டணச் சலுகை வழங்கப்படும். தமிழ்நாட்டில் அரசுப் பள்ளியில் படித்து மாவட்டம் தோறும் பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பெறும் ஒரு மாணவர், ஒரு மாணவிக்கு (விஐடி நுழைவுத் தேர்வில் பங்கேற்றிருக்க வேண்டும்) விடுதி வசதி, உணவு வசதியுடன் ஸ்டார்ஸ் திட்டத்தின்கீழ் இலவச சேர்க்கை வழங்கப்படும்’’ என்றார்.