

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சென்னையிலுள்ள முக்கிய கோயில்களில் நடந்த சிறப்பு வழிபாடுகளில் பக்தர்கள் நேற்று திரளாக பங்கேற்றனர்.
சித்திரை மாதம் வருகிற முழு நிலவை சித்ரா பவுர்ணமி நாளாக இந்துக்கள் வழிபட்டு வருகின்றனர். இதையொட்டி, கோயில்களில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டின் சித்ரா பவுர்ணமி நாளான நேற்று சென்னையிலுள்ள முக்கிய கோயில்களில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
சென்னை மயிலாப்பூர் முண்டகக்கண்ணியம்மன் கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நேற்று காலை முதலே பக்தர்கள் அதிகளவில் வந்து பிரார்த்தனை செய்தனர். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம், லட்சார்ச்சனை, அம்மன் வீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. சித்ரா பவுர்ணமி நேற்று முன் தினமே ஆரம்பித்ததால் வடபழனி முருகன் கோயிலில் அன்றைய தினம் சிறப்பு அபிஷேகமும், சுவாமி ஊர்வலமும் நடந்தது. சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயிலில் சித்திரைப் பெருவிழாவையொட்டி நேற்று புஷ்ப பல்லக்கு ஊர்வலம் நடந்ததாலும், சித்ரா பவுர்ணமி என்பதாலும் பக்தர்கள் திரண்டனர்.