

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக கூட்டணி போட்டியிடும் என்று அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும், தமிழகப் பொறுப்பாளருமான முரளிதர ராவ் கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி அரசின் ஓராண்டு நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக சென்னை வந்துள்ள முரளிதர ராவ், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி போட்டியிடும். கூட்டணிக் கட்சி தலைவர்களுடன் ஆலோசித்து வேட்பாளரை முடிவு செய்வோம். ஜெயலலிதா பதவி யேற்பு விழாவுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை ஏன் அழைக்கவில்லை என்று அதிமுக தரப்பைத்தான் கேட்க வேண்டும். மாநிலத் தலைவருக்கு அழைப்பு இல்லாததால், பாஜக வுக்கு அழைப்பு இல்லை என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
தனிப்பட்ட முறையில் அழைப்பு வந்ததால் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், எச்.ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். கட்சி சார்பில் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் என எந்த முடிவும் எடுக்காததால் அவர்கள் கலந்து கொண்டனர். எனவே, அதில் எந்தத் தவறும் இல்லை. பாஜகவை பொறுத்தவரை எதிர்க்கட்சிகளை எதிரி கட்சிகளாகப் பார்ப்பதில்லை. அந்த நாகரிகம் தமிழகத்தில் இல்லாதது வேதனை அளிக்கிறது.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு வெற்றிகரமாக ஓராண்டை நிறைவு செய்துள்ளது. உற்பத்தி, சேவைத் துறைகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முன்னுரிமை அளிக்கப் பட்டுள்ளது. அனைவருக்கும் வங்கிக் கணக்கு தொடங்கும் திட்டம், பிரதமரின் காப்பீட்டுத் திட்டம், தூய்மை இந்தியா திட்டம், மேக் இன் இந்தியா திட்டம் என பல சாதனைகளை சொல்லிக் கொண்டே போகலாம். கடந்த ஓராண்டில் எந்த ஊழலும் இல்லாதது மிகப்பெரிய சாதனையாகும். மே 26 முதல் 31-ம் தேதி வரை மோடி அரசின் ஓராண்டு நிறைவு கொண்டாட்டங்கள் நடைபெறும்.
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு சட்ட நடவடிக்கையாகும். நீதிமன்ற நடவடிக்கைகளில் பாஜக எப்போதும் தலையிடாது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதா? வேண்டாமா? என்பது அவரவர் விருப்பம்.
இவ்வாறு முரளிதர ராவ் கூறி னார்.
பேட்டியின்போது தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உடன் இருந்தார்.