

ஊழல் அமைச்சர்கள் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால், குறிப்பிட்ட அமைச்சர்கள் செய்த ஊழல் பட்டியலை பகிரங்கமாக வெளியிடுவேன் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் செல்லும் வழியில் நேற்று திருச்சி வந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: தமிழக பார் கவுன்சில் தலைவர் செல்வம், ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பு குறித்து நான் சொல்லாத தகவலை சொன்னதாகக் கூறியுள்ளார். அவர் இதே போல் தொடர்ந்து பேசினால் அவர் மீது அவதூறு வழக்கு தொடருவேன்.
ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பில் மத்திய பாஜக அரசின் அழுத்தம் இருந்திருக்கலாம் என சந்தேகம் உள்ளது. தமிழக பாஜக தலைவர் தமிழிசை, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரின் பேச்சும், ஜெயலலிதாவை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி சந்தித்ததும் சந்தேகத்தை வலுப்படுத்துகின்றன.
தமிழக அமைச்சர்கள் மீது ஆளுநரிடம் கொடுத்த ஊழல் புகார் மீது ஒரு மாதத்துக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் ஒவ்வொரு அமைச்சரின் ஊழல் பட்டியலையும் பகிரங்கமாக வெளியிடுவேன்.
காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் சித்தராமையா வால் அணை கட்ட முடியாது. மத்திய அரசு, நீதிமன்றம் ஆகியவற்றின் அனுமதியின்றி அவரால் அணை கட்ட முடியாது.
மேல்முறையீடு செய்ய வாய்ப்பு
பின்னர் புதுக்கோட்டையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, “ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யலாம் என கர்நாடக அரசுக்கு அம்மாநில அரசு வழக்கறிஞர் ஆச்சாரியா பரிந்துரைத்திருப்பதால் விரைவில் மேல்முறையீடு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் பொதுப் பிரச்சினைகளுக்காக சில கட்சிகளுடன் ஒன்று சேருவதை வைத்து இது தேர்தல் கூட்டணி என்ற முடிவுக்கு வந்துவிடக்கூடாது. கூட்டணி குறித்து கட்சி மேலிடம்தான் முடிவெடுக்கும்” என்றார்.