புதுச்சேரியில் காஞ்சி சங்கராச்சாரியாருக்கு சதாபிஷேக விழா

புதுச்சேரியில் காஞ்சி சங்கராச்சாரியாருக்கு சதாபிஷேக விழா
Updated on
1 min read

புதுச்சேரியில் உள்ள சங்கரா சேவா சங்கம் மற்றும் சங்கர வித்யாலயா பள்ளி நிர்வாகம் ஆகியவை சார்பாக நேற்று முன்தினம் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிக்கு 80-வது ஜெயந்தி சதாபிஷேக விழா தொடங்கியது. காலையில் ஜெயேந்திரருக்கு பாதபூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், இசிஆர் சாலையில் உள்ள ஸ்ரீசங்கர வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் மாலையில் சதாபிஷேக விழா சிறப்பு பூஜைகள் நடை பெற்றன.

அதன்பிறகு, இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜெயேந்திரருக்கு வெள்ளிக் கிரீடம் சூட்டி மலர் அபிஷேகத்தை விஜயேந்திரர் செய்து வைத்தார். அதைத் தொடர்ந்து, ஸ்ரீ சங்கர வித்யாலயா பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் 1177 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்த பானுபிரியா, 1174 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம் பிடித்த மகேஸ்வரி, 1164 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்த சுந்தர சுப்ரமணியன் ஆகியோரை காஞ்சி சங்கராச்சாரியார் இரு வரும் வாழ்த்தி ஆசி வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தி மற்றும் பள்ளி நிர்வாகத்தினர், மாணவ, மாணவிகள், பெற்றோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். காஞ்சி சங்கராச்சாரியார் இருவரும் மே 12-ம் தேதி வரை சதாபிஷேக விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in