Published : 11 May 2015 04:18 PM
Last Updated : 11 May 2015 04:18 PM

3,000 பணியிடங்கள் காலி: வி.ஏ.ஓ. சங்கம் அதிருப்தி

தமிழகத்தில் 3,000 வி.ஏ.ஓ. பணியிடங்கள் காலியாக உள்ளதாக கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில பொதுச்செயலாளர் வெங்கடேஷ்வரன் தெரிவித்தார்.

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாநில உயர்நிலைக் குழு கூட்டம் திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்த மாநில பொதுச்செயலாளர் வெங்கடேஷ்வரன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஒட்டன்சத்தரம் வி.ஏ.ஓ. தமிழ்செல்வி நிர்வாக நெருக்கடியால்தான் தற்கொலைக்கு முயன்றார். இப்பிரச்சினையை திசைதிருப்ப பார்ப்பதால் இதுவரை வழக்குபதிவு செய்ய வில்லை. மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

பிரச்சினைக்கு தொடர்பே இல்லாத வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர், இந்த விவகாரத்தில் அதிகாரிகளுக்கு ஆதரவாகச் செயல்படுவது கண்டனத்துக்குரியது. வி.ஏ.ஓ.வுக்கு நெருக்கடி கொடுத்த அதிகாரி கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் செவ்வாய்க்கிழமை முதல் தொடர் போராட்டம் நடத்தப்படும்.

தமிழகத்தில் 3,000 வி.ஏ.ஓ பணியிடங்கள் காலியாக உள்ளன. ஒரே வி.ஏ.ஓ. இரண்டுக்கும் மேற்பட்ட கிராமங்களை கவனிப்பதால் சிரமம் ஏற்படுகிறது. கிராம நிர்வாகப் பணிகள் ஸ்தம்பித்துள்ளதால் பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர். அரசு விரைவில், பணியிடங்களை நிரப்ப வேண்டும். அதிகாரிகள் வி.ஏ.ஓ.க்களுக்கு நெருக்கடி கொடுக்காமல் பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x