

திருப்பத்தூர் வனச் சரகத்துக்கு உட்பட்ட சாலைகளை மேம்படுத்த ரூ.40 கோடியை அரசு ஒதுக்கீடு செய்தும், பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இதனால் 3 மலை கிராம மக்கள் பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாதுமலையையொட்டி புங்கம்பட்டு நாடு, நெல்லி வாசல்நாடு, புதூர் நாடு என 3 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த 3 ஊராட்சிகளிலும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன. இந்த மலை கிராம மக்களுக்கு சாலை வசதி இல்லை. இதனால் மலையில் இருந்து கீழே வர பெரும் அவதிப்பட்டனர்.
திருப்பத்தூர் வனச் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில், இடம் கையகப்படுத்தப்பட்டு 3 ஊராட்சிகளுக்கும் சாலை வசதியை மேம்படுத்த முடியும் என்பதால் வனத்துறைக்கு ரூ.40 கோடி நிதியை அரசு ஒதுக்கீடு செய்தது. திருப்பத்தூர் வனத்துறை அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் சாலை அமைக்கும் பணிகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. இதனால் ரூ.40 கோடி நிதி மீண்டும் அரசிடம் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து புங்கம்பட்டு, புதூர்நாடு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, ‘‘மலைப்பகுதியில் போதிய மருத்துவ வசதி இல்லாததால், சிகிச்சைக்காக நாங்கள் திருப்பத்தூர் அல்லது ஆலங்காயம் செல்ல வேண்டும். சில நேரங்களில் ஆம்புலன்ஸை அழைத்தால் மலைப்பகுதியில் சாலை வசதி யில்லாததால் அவர்களும் வர மறுக்கின்றனர். 3 கிராம மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.40 கோடி செலவில் பிளாஸ்டிக் சாலைகள் அமைக்கப்படும் என ஊராட்சி நிர்வாகம் தெரிவித்தது. அதற்கான ஆய்வுகளை திருப்பத்தூர் வனத்துறையினருடன் இணைந்து ஊராட்சி நிர்வாகம் மேற்கொண்டது. ஆனால் ஆய்வுடன் முடிந்தது. பணிகள் தொடங்கவில்லை’’ என்றனர்.
இது தொடர்பாக திருப்பத் தூர் வனத்துறை அதிகாரி களிடம் விசாரித்தபோது, ‘‘சில சிக்கல்கள் நீடிப்பதால் பணிகள் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.