

பால் கொள்முதலை குறைப்பதற்காகவே கூட்டுறவு சங்கங்கள் மறைமுகமாக வாரம் ஒருநாள் விடுமுறை விடுவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''விவசாயிகள் உற்பத்தி செய்யும் பாலை, கூட்டுறவு சங்கங்கள் கடந்த சில மாதங்களாக முழுமையாக கொள்முதல் செய்யவில்லை. அதனால் விவசாயிகள் பாலை சாலைகளில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர் என்று செய்திகள் வெளியாகின. பால் கூட்டுறவு சங்கங்கள் மறைமுகமாக வாரத்தில் ஒருநாள் விடுமுறையை அறிவித்து, பால் கொள்முதலை நிறுத்தியுள்ளன. இதை வன்மையாக கண்டிக்கிறேன்.
விடுமுறை நாளன்று உற்பத்தியாகும் பாலை விவசாயிகள் என்ன செய்வார்கள்? அதனால் அவர்களுக்கு எவ்வளவு இழப்பு ஏற்படும் என்பதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும். தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் 29 லட்சம் லிட்டர் பாலை அரசால் கொள்முதல் செய்ய முடியவில்லை.
உபரியாக இருக்கும் பாலில் இருந்து பால் பொருட்களை அதிக அளவில் உற்பத்தி செய்யும் வகையில் திட்டமிட்டு செயல்படுத்தி இருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. ஆவின் நிறுவனம் அதை செய்யத் தவறியதால்தான் பால் உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்'' விஜயகாந்த் கூறியுள்ளார்.