வல்லூர் அனல் மின் நிலையத்துக்கு நிலக்கரி கொண்டுவர ரயில் பெட்டி ஒதுக்குங்கள்: ரயில்வே அமைச்சருக்கு தமிழக முதல்வர் கடிதம்

வல்லூர் அனல் மின் நிலையத்துக்கு நிலக்கரி கொண்டுவர ரயில் பெட்டி ஒதுக்குங்கள்: ரயில்வே அமைச்சருக்கு தமிழக முதல்வர் கடிதம்
Updated on
1 min read

வல்லூர் அனல் மின் நிலையத்துக்கு ஒடிசாவில் இருந்து நிலக்கரி கொண்டுவர ரயில்வே சரக்கு பெட்டிகளை ஒதுக்கவேண்டும் என்று கோரி மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபுவுக்கு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தேசிய அனல்மின் கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் கூட்டு முயற்சியில் வல்லூரில் அனல் மின் உற்பத்தி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 500 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட மூன்று அலகுகளில் 1500 மெகாவாட் மின்சாரம், நிலக்கரி மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதில் தமிழகத்துக்கு 1045 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 1500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் பெற்றிருந்தாலும் ஒடிசா மாநிலம் தல்சேர் நிலக்கரி சுரங்கத்தில் இருந்து தமிழகத்துக்கு நிலக்கரியை கொண்டு வர போதுமான ரயில் சரக்கு பெட்டிகள் இல்லாததால் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வல்லூர் அனல் மின் திட்டத்தின் ஒரு அலகில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. வல்லூர் மின் உற்பத்தி நிலையத்துக்கு போதுமான அளவு நிலக்கரி கிடைத்தால் மட்டுமே இந்த கோடைக்காலத்தில் ஏற்படும் மின் தேவையை சமாளிக்க முடியும்.

எனவே இந்த விஷயத்தில் நேரடியாக தலையிட்டு வல்லூர் அனல் மின் நிலையத்துக்கு நிலக்கரி கொண்டுவர தேவையான ரயில்வே சரக்கு பெட்டிகள் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in