Published : 03 May 2015 11:14 AM
Last Updated : 03 May 2015 11:14 AM

கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி பார்வையாளர்களை கவர்ந்த ‘மூவர்ண குடை மிளகாய் ஹெலிகாப்டர்’

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நேற்று தொடங்கிய காய்கறிக் கண்காட்சியில், மாவட்ட தோட்டக்கலைத் துறை சார்பில் வடிவமைக்கப்பட்டிருந்த ‘மூவர்ண குடை மிளகாய் ஹெலிகாப்டர்’ பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக, கோத்தகிரி நேரு பூங்காவில் நடைபெறும் 2 நாள் காய்கறிக் கண்காட்சியை, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் சுற்றுலாதுறை ஆணையர் ஆர்.கண்ணன், சுற்றுலா துறை இயக்குநர் ஹர் சஹாய் மீனா ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்.

இதையொட்டி, மாவட்ட தோட்டக் கலைத் துறை சார்பில் 30 அடி நீளம், 12 அடி உயரத்தில் 500 கிலோ பச்சை, சிவப்பு மற்றும் மஞ்சள் நிற குடை மிளகாய்களைக் கொண்டு பிரமாண்ட ஹெலிகாப்டர் வடிவமைக்கப்பட்டிருந்தது. அதேபோல் கேரட், வெங்காயம், முள்ளங்கி, பூசணி, காலிஃபிளவர் உள்ளிட்ட காய்கறிகள் மூலமாக நுழைவு வளைவு அமைக்கப்பட்டிருந்தது.

மதுரை தோட்டக்கலைத் துறை சார்பில் மயிலுடன் திருமலை நாயக்கர், பரதநாட்டியக் கலைஞர் (கோவை), சோட்டா பீம், யானை மற்றும் பறவைகள் (திண்டுக்கல்), கத்தரிக்காயைக் கொண்டு ஸ்பைடர் மேன் (திருப்பூர்), டிராகன் மற்றும் பீட்ரூட்டாலான கிளி (கன்னியாகுமரி) உள்ளிட்டவை, 5 டன் காய்கறிகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்தன.

மேலும், நீலகிரியில் விளையும் காய்கறிகள், பழங்கள், பாரம்பரிய தானியங்கள் உள்ளிட்டவையும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர், எம்.பி.க்கள் சி.கோபால கிருஷ்ணன், கே.ஆர்.அர்ஜுனன், தாட்கோ தலைவர் கலைச்செல்வன், மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவர் மேனகா, தோட்டக் கலைத் துறை இணை இயக்குநர் மணி உட்பட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x