

சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் பண்டிகை நாட்களில் மட்டுமே பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. மற்ற காலங்களில் போதிய பாதுகாப்பு இல்லாததால் பயணிகளிடையே அச்சம் நிலவுகிறது.
தமிழகத்தில் நகரமயமாக்கல் அதிகரித்துள்ளதால் முக்கிய நகரங்களுக்கு அன்றாடம் மக்கள் வந்து செல்வது பல மடங்கு அதிகரித்துவிட்டது. குறிப்பாக உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பெற அதிகமானோர் வருகின்றனர்.
முன்பெல்லாம் பண்டிகை நாட்களில்தான் மக்களின் பயணம் அதிகமாக இருக்கும். ஆனால், இப்போதெல்லாம் 2 நாட்களுக்கு தொடர் விடுமுறை வந்துவிட்டாலே போதும், சொந்த ஊர்களுக்கும், சுற்றுலாத் தலங்களுக்கும் அதிகமாக மக்கள் செல்கிறார்கள். இதனால், சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு செல்கிறார்கள்.
முக்கிய நாட்களில் மட்டுமே ரயில் நிலையங்களில் போலீஸ் கண்காணிப்பு அதிகமாக இருக்கிறது. மற்ற நாட்களில் மெட்டல் டிடெக்டர் சோதனைக் கூண்டுகள் காட்சி கருவிகளாக மட்டுமே உள்ளன. கண்காணிப்பு அறைகளிலும் ரகசிய கேமரா மூலம் பதிவாகும் காட்சிகளை பார்க்க போலீஸார் நியமிக்கப்பட்டிருந்தாலும், 24 மணி நேரமும் அங்கு அவர்கள் இருப்பதில்லை.
இது தொடர்பாக தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மைய தலைவர் டி.சடகோபனிடம் கேட்டபோது, ‘‘சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் முக்கியமான விழாக் காலங்களில் மட்டுமே பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. முன்பெல்லாம் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகள் ரயில்களில் பயணம் செய்வார்கள். அப்போது பாதுகாப்புப் பணிகள் தீவிரமாக இருக்கும். ஆனால், இப்போது அவர்கள் விமானம் மூலம் பயணம் செய்கின்றனர். இதனால் ரயில் நிலையங்களில் எப்போதுமே தீவிர கண்காணிப்பு செய்யப்படுவதில்லை. மேலும், சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் சோதனை நடத்த கூடுதலாக பிரிவுகளை உருவாக்க வேண்டும்’’ என்றார்.
இது தொடர்பாக ரயில்வே துறையை சேர்ந்த அதிகாரிகள் கூறும்போது, ‘‘சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் ஆயிரக்கணக்கில்தான் மக்கள் வந்து செல்வார்கள். ஆனால், இன்றைய நிலையோ அப்படி இல்லை. தொடர்ந்து 3 நாட்கள் வந்தாலே லட்சக்கணக்கானோர் ரயில் நிலையங்களில் குவியத் தொடங்கிவிடுகின்றனர். சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு மேம்படுத்த நவீன கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு போதிய போலீஸாரை நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம். போதிய அளவில் ஆட்களை நியமிக்கும்போது, பயணிகளுக்கான பாதுகாப்பு மேலும் வலுப்பெறும்’‘ என்றனர்.