Published : 09 May 2015 10:39 AM
Last Updated : 09 May 2015 10:39 AM

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய பரிந்துரையை ஏற்று ஓ.பி.சி. வருமான உச்சவரம்பை அதிகரிக்க வேண்டும்: வைகோ

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று ஓ.பி.சி. வருமான உச்சவரம்பை அதிகரிக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மத்திய அரசுக்கு வலியுறுத்தினயுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய அரசின் கல்வி, வேலை வாய்ப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான வருமான வரம்பை (கிரீமிலேயர்) ரூபாய் 6 இலட்சத்திலிருந்து, ரூபாய் பத்தரை இலட்சமாக உயர்த்த வேண்டும் என்று நீதிபதி ஈசுவரய்யா அவர்கள் தலைமையில் உள்ள தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் வரவேற்கத்தக்க பரிந்துரையை அளித்துள்ளது.

சமூக நீதிக்காகப் போராடி வரும் திராவிட இயக்கம், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் பெறாத வருமான உச்ச வரம்பு (கிரீமிலேயர்) என்று வலிந்து புகுத்தப்பட்டதை எதிர்த்து வருகின்றது. பிற்படுத்தப்பட்டோரை இரு கூறுகளாக பிளவுபடுத்தும் கிரீமிலேயர் முறையை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ச்சியாக எதிர்த்து வந்திருக்கின்றது.

சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கி இருக்கிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என்று அரசியல் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறதே தவிர, பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள் என்று குறிப்பிடப்படவில்லை.

இருந்தாலும், மண்டல் குழு பரிந்துரைகள் பற்றிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரணை நடந்தபோது, பெரும்பான்மையான நீதிபதிகள் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் ‘கிரீமிலேயர்’ என்ற பொருளாதார அளவுகோல் வேண்டும் என்று 16.11.1992 இல் தீர்ப்பு வழங்கினர்.

இதன் அடிப்படையில், 1993 ஆம் ஆண்டு முதல் இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறை நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டு, அப்போது ஒரு இலட்சம் ரூபாய் என்று வருமான உச்ச வரம்பு தீர்மானிக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக உயர்த்தப்பட்டு, 2013 ஆம் ஆண்டு 6 இலட்சம் ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டது.

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், 2013 ஆம் ஆண்டு, வருமான உச்ச வரம்பை நகர்ப்புறங்களில் 12 இலட்சம் ரூபாயாகவும், கிராமப்புறங்களில் 9 இலட்சம் ரூபாயாகவும் அதிகரிக்க வேண்டும் என்று வழங்கிய பரிந்துரையை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நடைமுறைப்படுத்த முன்வரவில்லை.

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களிலும், வேலை வாய்ப்புகளிலும் மண்டலக்குழு பரிந்துரைந்தவாறு 27 விழுக்காடு இடங்களை ஓ.பி.சி. பிரிவினருக்கு நிரப்ப முடியாமல், பாதி அளவுதான் ஒதுக்கீடு செய்கின்ற நிலைமை இருப்பதால், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான வருமான உச்சவரம்பை பத்தரை இலட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று பரிந்துரை அளித்தது.

இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறை முற்றாக நீக்கப்பட வேண்டும் என்றாலும், உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி ‘கிரீமிலேயர்’ தொடர்ந்து நடைமுறையில் உள்ளதால், சமூக நீதியை நிலைநாட்ட மத்திய அரசு தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று, ஓ.பி.சி. பிரிவினருக்கு வருமான உச்சவரம்பை பத்தரை இலட்சம் ரூபாய் என்று நிர்ணயம் செய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்"

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x