

சென்னைக்கு குடிநீர் தந்து கொண்டிருக்கும் வீராணம் ஏரி இன்னும் ஓரிரு நாளில் நிரம்பிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வீராணம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1.456 டி.எம்.சி.யாகும். தற்போது, அதில் 1.2 டி.எம்.சி. நீர் உள்ளது. கடந்த மாதம் 25-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீர் விநாடிக்கு 2,200 கன அடி என்ற வேகத்தில் வீராணம் ஏரியை வந்தடைந்து கொண்டிருக்கிறது. இதே வேகம் தொடர்ந்தால், அடுத்த ஒரு நாளில் வீராணம் ஏரி அதன் மொத்த கொள்ளளவை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் உள்ள பூண்டி, செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் ஆகிய ஏரிகளில் கடந்த ஆண்டு மே மாதம் 5-ம் தேதி 2.99 டி.எம்.சி. நீர் இருந்தது. ஆனால், இந்த ஆண்டு அதே தேதியில் 2.25 டி.எம்.சி நீர் தான் உள்ளது. ஆந்திராவிலிருந்து கொண்டுவரப்படும் கிருஷ்ணா நீரும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் வீராணம் நீர் சென்னைக்கு மிகவும் முக்கியமானதாகும்.
இது குறித்து சென்னை குடிநீர் வாரிய வட்டாரங்கள், “வீராணம் ஏரி நிரம்புவதன் மூலம் சென்னைக்கு வீராணம் நீர் தொடர்ந்து உறுதிப்படுத்தப்படும். மேலும், மற்ற நீர் ஆதாரங்களை உடனே பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது” என்று தெரிவித்தனர்.