

அசோக்நகர் ஆலந்தூர் வரையில் மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆய்வுப் பணிகள் ஓரிரு நாளில் நடக்கவுள்ளது. மேலும், இன்னும் ஒரு வாரத்தில் கோயம்பேடு ஆலந்தூர் இடையே முழுமையான ஆய்வுப் பணிகள் முடித்து, ரயில்கள் இயக்கத் தயாராகி விடும் என மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் இரண்டாவது பாதையில் கோயம்பேடு - ஆலந்தூர் இடையே 13 கி.மீ. தூரத்துக்கு பணிகள் முடி வடைந்துள்ளன. கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக பல்வேறு கட்ட சோதனை ஓட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கோயம்பேடு அசோக்நகர் இடையே மெட்ரோ ரயில் சேவை பாதுகாப்பு தொடர்பாக ஆய்வுப் பணிகள் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. ஆனால், அசோக்நகர் ஆலந்தூர் வரையில் ஆய்வுப் பணிகள் நடத்தப்படாமல் இருக்கிறது.
இது தொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘கோயம்பேடு அசோக்நகர் வரையில் பாதுகாப்பு ஆய்வுப் பணிகள் முடிக்கப்பட்டு, மெட்ரோ ரயில் இயக்க தயார் நிலையில் இருக்கிறது. எஞ்சியுள்ள அசோக்நகர் ஆலந்தூர் வரையிலான ஆய்வுப் பணிகளை ஓரிரு நாளில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் (தெற்கு வட்டம்) மிட்டல் தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவினர் வந்து நடத்துவார்கள். இன்னும் ஒரு வாரத்துக்குள் கோயம்பேடு ஆலந்தூர் வரையில் ஒட்டுமொத்த பணிகளை முடிக்கவுள்ளோம்’’ என்றனர்.