Published : 12 May 2015 09:47 AM
Last Updated : 12 May 2015 09:47 AM

ஜெ. வழக்கும்.. தீர்ப்பும்..: இணையத்தில் எதிரொலித்த வாசகர் கருத்துகள்

எஸ். கோடீஸ்வரன் :

நீதியரசர் குமாரசாமி தீர்ப்பை 150 முடிச்சு, பாஸ் மார்க், இடையில் நடந்தது என்ன என்றெல்லாம் கேட்டு கோபத்தின் உச்சியில் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார். பவானி சிங் நியமனம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் கூறியபோது தர்மம் வென்றது என்று குதித்தார். அவர் நிலைப்பாடு வேடிக்கையாக உள்ளது.

பூங்கொடி :

பவானி சிங் அதிமுகவுக்கு ஆதரவாக இருக்கிறார் எனக் கூறி மாற்றச் சொன்னீர்கள். அவர்களும் பவானி சிங்கை நீக்கிவிட்டு மீண்டும் ஆச்சார்யாவை கொண்டு வந்தார்கள். எப்படி முறையற்று சொத்து சேர்த்தார்கள் என்று ஆச்சார்யா வாதம் வைக்கவில்லை. ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு மனு ஏற்கத் தக்கதல்ல. அதில் கர்நாடக அரசை அவர்கள் சேர்க்கவில்லை என்றுதான் 18 பக்கத்துக்கு எழுதிக் கொடுத்தார். நீதிபதியும் ‘குற்றவாளிகள் எப்படி சொத்து சேர்த்தனர் என்பதை அரசுத் தரப்பு நிரூபிக்கவில்லை’ என்று ஜெ. தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிவிட்டார். இதில் என்ன ஆச்சரியம்? கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லாமல் கேட்காத கேள்விக்கு பதில் சொன்னால் எந்த ஆசிரியர்தான் மார்க் போடுவார்?

சுபாஷ் :

ஜெயலலிதா நிரபராதி என்ற தீர்ப்பு ஒருபுறம் இருக்கட்டும்... நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பு தவறு என்றால், ஒரு மாநிலத்தின் முதல்வர் மீது செய்யாத குற்றத்தை செய்ததாகக் கூறி தண்டனை கொடுத்து அவமானப்படுத்தியது குன்ஹாவின் தவறு. அதேசமயம் குமாரசாமியின் தீர்ப்பு தவறு என்றால், ஒரு குற்றவாளியின் தவறை இல்லை என்றாக்கிய வகையில் அவரும் தவறிழைக்கிறார். அப்படியானால், யார்தான் குற்றவாளி? நீதிபதிகள் இருவரில் ஒருவரா? அல்லது வழக்கு போட்ட அரசியல்வாதிகளா? வழக்கை சந்தித்தவர்களா?

சேகரன் :

‘நீதிமன்றங்களுக்கெல்லாம் உயர்ந்த நீதிமன்றம் ஒன்று இருக்கிறது. அதுதான் மனசாட்சி என்ற நீதிமன்றம். அது அனைத்து நீதிமன்றங்களுக்கும் மேலானது’ என்று அண்ணல் காந்தியடிகள் கூறியதைத்தான் இப்போது எல்லோருக்கும் நினைவுபடுத்த விரும்புகிறேன் என்று கருணாநிதி கூறியுள்ளார். 2ஜி வழக்கு, கலைஞர் டிவி வழக்கு, பிஎஸ்என்எல் வழக்கு, ஏர்செல் மேக்சிஸ் வழக்கு ஆகிய வழக்குகளின் தீர்ப்பு வரும்போதும் இதனை திமுக மறக்கக்கூடாது.

ரவி :

சர்க்காரியா கமிஷன் அடிப்படையில் போடப்பட்ட வழக்குகள் இந்திரா காந்தி காலங்களில் தீ(நீ)ர்த்து வைக்கப்பட்டன. அப்படி இல்லையே இது! நீதிமன்றத்தை முழுமையாக சந்தித்தே வெற்றிபெற்றுள்ளார் ஜெயலலிதா.

வெட்டுப்புலி வீரன் :

நீதியும் சாகவில்லை, அநீதியும் வெல்லவில்லை! சட்டத்தின் நிறம், தரம், திடம் தெரிந்திருக்கிறது. ஒரு பரபரப்பான வழக்கில் வழங்கிய தீர்ப்புக்கு, ஒரே வருடத்துக்குள் அதற்கு மாற்றான தீர்ப்பு வருகிறது என்றால், அந்த சட்டத்திலோ அல்லது அதனை நடைமுறைப்படுத்தும் விதத்திலோ கோளாறு இருக்கிறது. அதனை சீர் செய்யாவிட்டால் நாட்டு நடப்பு சீர்கெடும்.

ஜானகிராமன் :

கீழ் நீதிமன்ற தீர்ப்பை மதித்தவர்கள் அனைவரும் இந்த நீதிமன்ற தீர்ப்பையும் மதிக்க வேண்டும். அதுதான் நேர்மை.

குமார் :

திமுக-வைப் பொறுத்த வரையில் குன்ஹா நல்லவர் குமாரசாமி கெட்டவர்.. ஜெயாவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டால் நீதி, நேர்மை, நியாயம்.. கனிமொழிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டால் ‘பெண் என்றும் பாராமல் வதைக்கிறார்களே!’.. ஜெயலலிதாவை அருண் ஜெட்லி சந்தித்தால் அது பேரம்... கருணாநிதியோ சோனியாவை சந்தித்து பேசினால், அது பேரம் இல்லை! அப்படித்தானே..!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x