

பிரதமர் நரேந்திர மோடி - தேமுதிக தலைவர் விஜயகாந்த் சந்திப்பில் அரசியல் எதுவும் இல்லை என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை திருவல்லிக் கேணியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நிறுவனர் ச.அப்துல் மஜீத்தின் உருவப்படத்தை வாசன் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தேமுதிக தலைவர் விஜய காந்த் என்னை சந்தித்தபோது, தமிழகத்தின் 5 முக்கியப் பிரச்னைகள் குறித்து பிரதமரிடம் நேரில் முறையிட இருக்கிறோம். தமாகா சார்பில் பிரதிநிதிகளை அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். மக்கள் பிரச்சினைகளில் அக்கறை உள்ள கட்சி என்கிற முறையில் அவரது அழைப்பை ஏற்றுக் கொண்டோம்.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து விஜயகாந்த் அழைத்துச் சென்றார். எனவே, பிரதமர் மோடியை அவர் சந்தித்ததில் அரசியல் இருப்பதாக நான் நினைக்கவில்லை.
காவிரியின் குறுக்கே கர்நாடகம் தடுப்பணைகள் கட்டினால் தமிழகத்தில் குடிநீருக்குக் கூட தண்ணீர் கிடைக்காது. இந்தப் பிரச்சினையில் தமிழகத்தின் பக்கம் நீதியும், நியாயமும் இருப்பதை அனைவரும் அறிவார்கள். எனவே, தடுப்பணைகள் கட்டும் கர்நாடகத்தின் முயற்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நிறுவனர் அப்துல் மஜீத் ஆசிரியர்களின் நலனுக்காகப் பாடுபட்டவர். மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், தொகுப்பூதியம் பெறும் ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் போராடி வருகின்றனர். நாட்டின் வருங்காலத்தை தீர்மானிக்கும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறை வேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.