

முன்னாள் அமைச்சர் துரை முருகனின் ஏலகிரி பண்ணை வீட்டில் 4 சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டது தொடர் பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், திருப்பத் தூர் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து திருப்பத்தூர் வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
முன்னாள் அமைச்சர் துரை முருகனுக்கு ஏலகிரி மலையில் மஞ்சக்கொல்லை புதூர் என்ற பகுதியில் பல ஏக்கர் பரப்பள வில் தோட்டத்துடன் கூடிய பண்ணை வீடு உள்ளது. இந்த பண்ணை வீட்டில், அரிய வகை மரங்கள் வளர்க்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.
இரவு பாதுகாவலராக பணி யாற்றி வரும் பொன்னேரியைச் சேர்ந்த துரை என்பவர், நேற்று காலை தோட்டத்தை சுற்றிவந்தபோது 4 சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டிக் கடத்தியிருப்பது தெரியவந்தது.
பண்ணை வீட்டை சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் அமைக்கப்பட்டுள்ள நிலையில், சுவர் ஏறி குதித்து சந்தன மரங்களை வெட்டிக் கடத்தியுள்ளனர். துரைமுருகனின் பண்ணை வீட்டில் வெட்டப்பட்ட சந்தனமரம், பல லட்சம் மதிப்புள்ளவை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து திருப்பத்தூர் வனவர் பரமசிவத்திடம் இரவு பாதுகாவலர் துரை கொடுத்த புகாரின்பேரில், வனத்துறை அலுவலர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர், மரங்களை வெட்டிக் கடத்திய மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.