ஜெயலலிதா வருகை: அண்ணா சாலையும் அதிமுக மயமும்!

ஜெயலலிதா வருகை: அண்ணா சாலையும் அதிமுக மயமும்!
Updated on
2 min read

சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலை பெற்று 7 மாதங்களுக்குப் பிறகு ஜெயலலிதா பொதுமக்கள் மற்றும் தொண்டர்களை சந்திக்க வருகிறார்.

217 நாட்களுக்குப் பிறகு ஜெயலலிதாவை நேரில் காண்பதற்காக சென்னை - அண்ணா சாலையில் அதிமுக தொண்டர்கள் திரண்டுள்ளனர்.

இதையொட்டி, சென்னை போயஸ் கார்டன் - அண்ணா சாலை - ஆளுநர் மாளிகை பகுதிகளில் காலையில் தொடங்கி பிற்பகல் 12.45 வரையிலான முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு:

அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஜெயலலிதா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, தமிழக முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். | விரிவான செய்திக்கு - >அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்வு: தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் ராஜினாமா |

வெடிகுண்டு மிரட்டல்... ஒருவர் கைது

தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்கும் நிகழ்வுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்த தொலைபேசி மிரட்டல் தொடர்பாக ஒருவரை சென்னை போலீஸார் கைது செய்தனர். ஜெயலலிதா தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்கவுள்ள விழா, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் நடக்கவுள்ளது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் அங்கு தீவிரமாக நடந்து வருகின்றன. அரங்கை புதுப்பிப்பது, விஐபிகளுக்கு இருக்கை ஒதுக்குவது, பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட பணிகள் இரவு, பகலாக நடக்கிறது.

இந்த நிலையில், ஜெயலலிதா பதவியேற்கும் அரங்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து நேற்று நள்ளிரவு ஒரு மர்ம தொலைபேசி மிரட்டல் வந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார், ஒருவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

தொண்டர்கள் உற்சாகம்

* போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து வெளியே வரும் ஜெயலலிதாவை வரவேற்க, ஆயிரக்கணக்கான தொண்டர்களும் கட்சி நிர்வாகிகளும் காத்திருக்கின்றனர். ஜெயலலிதாவை வாழ்த்தி உற்சாகத்துடன் குரல் எழுப்பியவண்ணம் இருந்தனர். அண்ணா சிலை அருகே தொடர்ச்சியாக ஜெயலலிதா நடித்த படங்களில் இடம்பெற்ற பாடல்களும், அதிமுக பிரச்சாரப் பாடல்களும் ஒலிபரப்பப்பட்டு வருகின்றனர்.

* ஜெயலலிதா இல்லம் அமைந்துள்ள போய்ஸ் கார்டனில் நுழைவுப் பகுதியில் பத்திரிகையாளர்களும், பார்வையாளர்களும் 11.40 மணியளவில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

ஓர் இரவுத் தூய்மைத் திட்டம்!

பிற்பகல் 1.20 மணியளவில் புறப்பட்டு ஆளுநர் மாளிகைக்கு செல்லும் ஜெயலலிதா, சட்டப்பேரவை தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதம் மற்றும் அமைச்சர்கள் பட்டியலை ஆளுநர் ரோசய்யாவிடம் வழங்கி, ஆட்சி அமைக்க உரிமை கோருவார்.

ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்படும் ஜெயலலிதா, கிண்டி, சைதாப்பேட்டை வழியாக அண்ணா சாலை ஸ்பென்சர் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு 2 மணிக்கு வருகிறார். எம்ஜிஆர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய பின், வாலாஜா சாலை சந்திப்பில் உள்ள அண்ணா சிலைக்கு 2.15 மணிக்கு மரியாதை செலுத்துகிறார்.

அங்கிருந்து மீண்டும் அண்ணாசாலை வழியாக சென்று, அண்ணா மேம்பாலம் கீழ் உள்ள பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு போயஸ் தோட்டம் திரும்புகிறார்.

இதையொட்டி, அண்ணாசாலை முழுவதும் ஒரே இரவில் முழுமையாக தூய்மையாகக் காட்சி அளிக்கிறது. ஆங்காங்கே வண்ணம் தீட்டப்பட்டுள்ளன. வழக்கமான அண்ணா சாலை போல் அல்லாமல் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது.

அங்கிங்கெனாதபடி எங்கும் ஜெ. மயம்

சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலை பெற்று 7 மாதங்களுக்குப் பிறகு ஜெயலலிதா பொதுமக்கள் மற்றும் தொண்டர்களை சந்திக்க வருகிறார். எனவே, அவருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்க அதிமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

போயஸ் தோட்டத்தில் இருந்து ஆளுநர் மாளிகை வரையிலும் அண்ணா சாலையிலும் வழிநெடுக ஜெயலலிதாவை வரவேற்று தட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தட்டியிலும் அதிமுகவினரால் ஜெயலலிதாவின் புகழ் தீட்டப்பட்டுள்ளது. மெட்ரோ பணிகள் நடப்பதற்கான சுவடுகளே தெரியாத வகையில் தட்டிகளின் ஆதிக்கம் காணப்படுகிறது.

சென்னை மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அண்ணா சாலையில் திரண்டுள்ளனர்.

உச்சகட்ட பாதுகாப்பு

ஜெயலலிதா செல்லும் பாதைகளில் நேற்று மாலை முதலே போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். எம்ஜிஆர், அண்ணா, பெரியார் சிலைகள் அமைந்துள்ள பகுதிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

காலையில் இருந்தே அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இயன்றவரை போக்குவரத்து போலீஸார் ஒழுங்குபடுத்தி வருகிறார்கள். ஜெயலலிதா வருகையின்போது போக்குவரத்தில் மாற்றம் இருக்கும் எனத் தெரிகிறது.

தமிழக முதல்வராக ஜெயலலிதா நாளை பொறுப்பேற்க உள்ளார். இதற்கான விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் நடக்கிறது. காலை 11 மணிக்கு தொடங்கி 12 மணிக்குள் விழா முடிவடையும்.

முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு ஆளுநர் ரோசய்யா, பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். விழா முடிந்ததும் தலைமைச் செயலகத்துக்கு செல்லும் ஜெயலலிதா, முதல்வராக பொறுப்பேற்றுக் கொள்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in