பணியின் புனிதத்தை உணர்ந்து ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்: ஆளுநர் ரோசய்யா வலியுறுத்தல்

பணியின் புனிதத்தை உணர்ந்து ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்: ஆளுநர் ரோசய்யா வலியுறுத்தல்
Updated on
1 min read

ஆசிரியர்கள், தங்கள் பணியின் புனிதத்தை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று ஆளுநர் ரோசய்யா கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அலுவலகம் அருகே, புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்து வரும் சங்க உறுப்பினர்கள் தங்குவதற்காக இந்தக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. புதிய கட்டிடத்தின் திறப்பு விழா, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் இன்று நடந்தது. கட்டிடத்தின் கல்வெட்டை திறந்து வைத்து ஆளுநர் ரோசய்யா பேசியதாவது:

ஒரு தேசத்தை கட்டமைப்பதில் வகுப்பறைகளுக்கு மிக முக்கிய பங்குண்டு. கல்வி என்பது அறிவையும், திறனையும் மட்டும் வளர்த்தெடுப்பதல்ல. மனித மாண்புகளையும் ஒழுக்கத்தையும் கற்றுத் தருவதே கல்வியின் முதன்மையான நோக்கமாக இருக்க வேண்டும். ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுத் தருவதை மட்டும் தன் தோள்மேல் சுமக்காமல், முன்மாதிரிகளாகவும் திகழ வேண்டும்.

கடவுளுக்கு அடுத்தபடியாக ஆசிரியர்களை கூறுகிறோம். ஆனால், இன்றைக்கு சில ஆசிரியர்கள் பாதையை விட்டு விலகிச் செல்கின்றனர். இதனால் ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்துக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. இந்நிலை தொடராமல் இருக்க, ஆசிரியர்கள் தங்கள் பணியின் புனிதத்தை உணர்ந்து, சிறப்பான முறையில் கல்வியை வருங்காலத் தலைமுறைக்கு அளிப்பார்கள் என்று நம்புகின்றேன்.

இவ்வாறு ரோசய்யா பேசினார்.

அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் தலைவர் இராம்பால் சிங், பொதுச் செயலாளர் கமலகாந்த் திரிபாதி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் கோ.காமராஜ், பொதுச் செயலாளர் ந.ரெங்கராஜன், பொருளாளர் அ.ஜோசப் சேவியர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in