

சீரமைப்புப் பணிகள் முடிந்தும் சென்னை காந்தி மண்டப வளாகம் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால், சுற்றுலா வரும் பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர்.
கோடை விடுமுறை தொடங்கி விட்டது. வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை யும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னைக்கு வரும் பெரும்பாலான மக்கள் விரும்பி பார்க்கும் இடங்கள் மெரினா கடற்கரை, பிர்லா கோளரங்கம், கிண்டி சிறுவர் பூங்கா, காந்தி மண்டபம், வண்டலூர் பூங்கா ஆகியவை. இதில் கிண்டி சிறுவர் பூங்காவும் காந்தி மண்டபமும் அருகருகே இருப்பதால் இரு இடங்களுக்கும் பயணிகள் செல்வது வழக்கம். புதுப்பிப்பு பணி காரணமாக மூடப்பட்டுள்ள காந்தி மண்டப வளாகம் இன்னும் திறக்கப்படாததால் சுற்றுலா வரும் பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர்.
ரூ.11.62 கோடியில் பணிகள்
சுமார் 18 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள காந்தி மண்டப வளாகத்தில் மகாத்மா காந்தி மண்டபம் அருகே முன்னாள் முதல்வர்கள் ராஜாஜி, பக்தவத் சலம், காமராஜர் ஆகியோரின் நினைவு மண்டபங்களும் உள்ளன. தலித் மக்கள் போராளி இரட்டை மலை சீனிவாசன், மொழிப்போர் தியாகிகள் மற்றும் தியாகிகள் மணி மண்டபங்களும் இருக்கின்றன. காந்தி மண்டபத்தில் கடந்த ஆண்டு ஏப்ரலில் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கின. இதற்காக தமிழக பொதுப்பணித் துறை ரூ.11.62 கோடி ஒதுக்கியது.
புல்வெளியால் தாமதம்
அதில் 700 இருக்கைகள் கொண்ட அரங்கம், பயணிகள் உட்கார்ந்து ஓய்வு எடுக்க 100 இருக்கைகள், நீரூற்று, அல்லிப்பூ குளம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. மறுசீரமைப்பு பணிகள் முடிந்து கடந்த அக்டோபரில் காந்தி ஜெயந் தியன்று காந்தி மண்டபத்தை பொது மக்கள் பார்வைக்குத் திறக்க திட்டமிடப்பட்டு இருந்தது. புல்வெளி அமைக்கும் பணி தாமதமானதால் திறக்கப் படவில்லை.
முதல்வர் திறந்துவைக்கிறார்
இதுகுறித்துப் பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘காந்தி மண்டபத்தில் 99 சதவீத பணிகள் முடிந்துள்ளன. புல்வெளி அமைக்கும் பணியும் தற்போது முடிவடைந்து புற்கள் நன்றாக வேர்விட்டு வளரத் தொடங்கிவிட்டன.
காந்தி மண்டபம் திறப்பதற் கான கோப்புகள் சம்பந்தப் பட்ட துறையினரிடம் கொடுக்கப் பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, புதுப்பிக்கப்பட்ட காந்தி மண்டபத்தை முதல்வர் ஜெயலலிதா திறந்துவைப்பார்’’ என்றனர்.