

நாட்டில் வேலைவாய்ப்பு, சமூக பாதுகாப்பை உறுதி செய்யாமல் தொழிலாளர்களுக்கு மத்திய அரசு துரோகம் இழைத்து வருகிறது என்றார் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ.விஜயராகவன்.
புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற அச்சங்கத்தின் மாநிலக் குழுக் கூட்டத்தின்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஏழைகளுக்கு ஓரளவு பாதுகாப்பு அளித்து வந்த தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு தேவையான நிதியை ஒதுக்கி செயல்படுத்தாமல் திட்டத்தை மத்திய அரசு முடக்கிவிட்டதால் நாட்டில் 80 சதவீதம் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பிழைப்புக்காக அவர்கள் குடும்பத்தோடு இடம்பெயரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிர்ப்பு கிளம்பும் என தெரிந்தே அவையில் மசோதாவைக் கொண்டுவராமல், அவசர நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது. இருக்கும் நிலத்தை யும் ஏழைகளிடம் இருந்து எடுத்துக்கொள்ள வேண்டும் என மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. இந்த மசோதாவை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும்.
நாட்டில் வேலைவாய்ப்பு, சமூகப் பாதுகாப்பு, குழந்தைகள், ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்கள் என மிகவும் பின்தங்கிய மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டியது தனது கடமை எனத் தெரிந்தும்கூட அதைச் செய்ய மத்திய அரசு தவறி வருகிறது என்றார்.