

கோயம்பேடு சந்தையில் வியாபாரியிடம் ரூ.30 ஆயிரம் பணத்தை வழிப்பறி செய்த கொள்ளையனை போலீஸார் விரட்டிப் பிடித்தனர்.
சென்னை கோயம்பேடு மொத்த பழ விற்பனை அங்காடியில் ஒரு கடையில் ஊழியராக வேலை செய்பவர் தினேஷ்குமார். கடைகளில் வசூல் செய்த பணத்தை முதலாளியிடம் கொடுப்பதற்காக நேற்று முன்தினம் இரவில் சென்றுகொண்டிருந்தார். அப் போது திடீரென ஒருவர், தினேஷ்குமாரின் தோளில் கை போட்டதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதை பயன்படுத்தி தினேஷ்குமார் பாக்கெட்டில் இருந்த ரூ.30 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு அந்த நபர் ஓடினார். உடனே தினேஷ்குமார் ‘திருடன் திருடன்’ என கத்திக்கொண்டே அவரை துரத்திச் சென்றார். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த போலீஸார் கொள்ளையனை வழிமறித்து பிடித்தனர்.
விசாரணையில் அவர் கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பது தெரிந்தது. செந்திலிடம் இருந்து ரூ.30 ஆயிரம், மேலும் ரூ.8 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.8 ஆயிரம் பணம் மற்றொருவரின் பாக்கெட்டில் இருந்து பிக்பாக்கெட் அடித்தது விசாரணையில் தெரிந்தது. போலீஸார் செந்திலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.