Published : 14 May 2015 08:31 PM
Last Updated : 14 May 2015 08:31 PM

சமையல் எண்ணெய் விலை வீழ்ச்சியை தடுக்க பாமாயில் இறக்குமதியை குறைக்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் சமையல் எண்ணெய் விலை வீழ்ச்சியை தடுக்க பாமாயில் இறக்குமதியை குறைக்க வேண்டுமென தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ''விவசாயப் பொருட்கள் குறிப்பாக எள், கடலை, கடுகு, தேங்காய் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. 2014–ம் ஆண்டு ரூ.110 ஆக இருந்த ஒரு கிலோ எள்ளின் விலை, இந்த ஆண்டு ரூ.60 ஆக குறைந்துள்ளது.

நம் நாட்டில் சமையல் எண்ணெய் தேவை சுமார் 1.9 கோடி டன். இதில் 65 சதவீதம் பாமாயில் இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால், உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் சமையல் எண்ணெய் விற்க முடியாமல் தேங்கி உள்ளதால் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. எனவே பாமாயில் இறக்குமதியை குறைக்க வேண்டும். அதற்கு இறுக்குமதி வரியை கூட்டுவதன் மூலம் உள்ளூர் விலைவாசிக்கு சமன்படுத்த முடியும்.

உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் சமையல் எண்ணெய் விற்பனை கூடுவதன் மூலம் விவசாயிகள் பயனடைவார்கள். இதற்காக மத்திய அரசு, மாநில அரசின் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

கரும்புக்கு கட்டுப்படியான விலை

கரும்புக்கான விற்பனை விலையை மத்திய அரசு ஆண்டுதோறும் நிர்ணயம் செய்கிறது. அப்போது, கரும்பின் உற்பத்திச் செலவை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. சமீபத்தில் விற்பனை விலையில், விவசாயிகள் சரியான பங்கை அளிக்க வகை செய்யும் சட்டப்பிரிவு 5–ஏ ஐ மத்திய அரசு ரத்து செய்துள்ளது. ஆலைகளுக்கான 10 சதவீத லெவியை ரத்து செய்துள்ளது. ஆனால், கரும்பு விவசாயிகளுக்கு உரிய லாபம் கிடைக்க வில்லை. கரும்பு விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்க மத்திய, மாநில அரசுகள் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x