Published : 18 May 2014 03:22 PM
Last Updated : 18 May 2014 03:22 PM

காங்கிரஸ்-38, தேமுதிக-11, திமுக-2: தொகுதிகளில் டெபாசிட் இழப்பு

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 34 இடங்களில் போட்டியிட்ட திமுக 2 தொகுதிகளிலும், 14 இடங்களில் போட்டியிட்ட தேமுதிக 11 தொகுதிகளிலும் 39 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 38 தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தன.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வெற்றி வாய்ப்பை இழந்தாலும் மொத்தம் பதிவாகும் வாக்குகளில் 6-ல் ஒரு பங்கு வாக்குகளைப் பெற்றால்தான் டெபாசிட் தொகையைத் திரும்பப் பெற முடியும். அதற்கு குறைவான வாக்குகளைப் பெற்றால் டெபாசிட் பறிபோகும்.நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த வெள்ளிக்கிழமை எண்ணப்பட்டன. இதில் அதிமுகவைத் தவிர மற்ற கட்சிகள் எல்லாம் ஒரு சில தொகுதிகளில் டெபாசிட்டை இழந்தன. கட்சி வாரியாக டெபாசிட் இழந்த விவரம் வருமாறு:

திமுக - 2

மொத்தம் 34 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக, கன்னியாகுமரி, தர்மபுரி ஆகிய 2 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது. தமிழகம் முழுவதும் திமுக 95 லட்சத்து 75 ஆயிரத்து 850 வாக்குகள் பெற்று 23.6 சதவீதத்தை எட்டியுள்ளது.

காங்கிரஸ் - 38

39 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, 38 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்தது. கன்னியாகுமரி தொகுதி வேட்பாளர் வசந்தகுமார் மட்டும் டெபாசிட்டை தக்கவைத்து, இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார். தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி 17 லட்சத்து 51 ஆயிரத்து 123 வாக்குகள் (4.3%) பெற்றுள்ளது.

தேமுதிக - 11

தேமுதிக 14 தொகுதிகளில் போட்டியிட்டு திருப்பூர், விழுப்புரம், சேலம் ஆகிய 3 தொகுதிகளில் மட்டும் டெபாசிட் பெற்றுள்ளது. திருவள்ளூர், மத்திய சென்னை, வடசென்னை, கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திண்டுக்கல், திருச்சி, கடலூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய 11 தொகுதிகளில் டெபாசிட் காலியானது. 14 தொகுதிகளிலும் மொத்தம் 20 லட்சத்து 79 ஆயிரத்து 392 வாக்குகள் (5.1%) பெற்றுள்ளது.

பாஜக - 2

மொத்தம் 9 தொகுதிகளில் (பெரம்பலூர் ஐஜேகே, வேலூர் - புதிய நீதிக்கட்சி உள்பட) போட்டியிட்ட பாஜக, கன்னியாகுமரியில் மட்டும் வெற்றி பெற்றது. தஞ்சை, சிவகங்கை தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. மொத்தம் 22 லட்சத்து 22 ஆயிரத்து 90 வாக்குகள் (5.5%) பெற்றுள்ளது. (நீலகிரியில் பாஜக வேட்பாளரின் வேட்புமனு தள்ளுபடியானதால் அங்கு போட்டியிட முடியவில்லை)

பாமக - 3

பாமக 8 தொகுதிகளில் போட்டியிட்டு, தர்மபுரியில் மட்டும் (அன்புமணி ராமதாஸ்) வெற்றி பெற்றது. மயிலாடுதுறை, திருவண்ணாமலை, நாகை தொகுதிகளில் டெபாசிட் பறிபோனது. மொத்தம் 18 லட்சத்து 4 ஆயிரத்து 812 வாக்குகள் (4.4%) பெற்றது.

மதிமுக - 2

மதிமுக 7 தொகுதிகளில் போட்டியிட்டு காஞ்சிபுரம், ஈரோடு, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் தென்காசி தொகுதிகளில் டெபாசிட் பெற்றது. மீதமுள்ள ஸ்ரீபெரும்புதூர் மற்றும் தேனி ஆகிய தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. 7 தொகுதிகளிலும் 14 லட்சத்து 17 ஆயிரத்து 535 வாக்குகள் (3.5%) பெற்றுள்ளது. விருதுநகர் தொகுதியில் வைகோ இரண்டாம் இடத்தைப் பெற்றார்.

விடுதலைச் சிறுத்தைகள்

திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் டெபாசிட் பெற்றது. மொத்தம் 6 லட்சத்து 6 ஆயிரத்து 110 வாக்குகள் (1.5%) பெற்றுள்ளது. அதேபோல திமுக கூட்டணியில் தலா ஒரு தொகுதியில் போட்டியிட்ட முஸ்லிம் லீக், மமக கட்சிகளும் டெபாசிட்டை தக்கவைத்தன.

ஆம் ஆத்மி

25 தொகுதிகளில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியும் தலா 9 தொகுதிகளில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும் அனைத்து இடங்களிலும் டெபாசிட் இழந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x