

நிலக்கரி பற்றாக்குறை மற்றும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வல்லூர் அனல் மின் நிலையத்தின் 2 அலகுகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், 700 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேட்டூர், தூத்துக்குடி, வடசென்னை, எண்ணூர் உள்ளிட்ட அனல் மின் நிலையங்களில் மொத்தம் 4,660 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் சராசரியாக தினமும் 3,900 முதல் 4,250 மெகாவாட் வரை தமிழகத்துக்கு கிடைக்கிறது.
இதுதவிர வல்லூர், நெய்வேலி அனல் மின் நிலையங்கள் மற்றும் மத்திய அரசு தொகுப்பில் இருந்து 4,944 மெகாவாட் மின்சாரம் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 5-ம் தேதி வடசென்னை அனல் மின் நிலையத்தில் 500 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகில் கொதிகலன் குழாய் வெடிப்பு காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதையடுத்து, புதிய கொதிகலன் குழாய் மாற்றப்பட்டு உற்பத்தி தொடங்கியது.
இந்நிலையில், தமிழகத்துக்கு 1,078 மெகாவாட் மின்சாரத்தை அளிக்கும் 3 அலகுகள் கொண்ட வல்லூர் அனல் மின் நிலையத்தில் 2 அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
வல்லூர் அனல் மின் நிலையத்தை பொறுத்தவரை, ஒடிசா மாநிலம் தல்சேரில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ள நிலக்கரியைக் கொண்டே மின் உற்பத்தி நடக்கிறது. அங்கிருந்து நிலக்கரி கொண்டு வருவதற்கான ரயில் பெட்டிகள் போதுமானதாக இல்லாததால், நிலக்கரி வரத்து குறைந்தது. இதனால், கடந்த 7-ம் தேதி முதல் அந்த அலகில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. நேற்று காலை மேலும் ஒரு அலகில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. தற்போது 2 அலகுகளிலும் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் தமிழகத்துக்கு வரவேண்டிய 715 மெகாவாட் மின்சாரம் கிடைக்கவில்லை.
இதுகுறித்து மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘தமிழகத்தில் பரவலாக மழை பெய்துவருவதால், மின் நுகர்வு குறைந்துள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதிக்கப்பட்ட வல்லூர் மின் நிலைய அலகுகள் விரைவில் சீரமைக்கப்படும்’’ என்றார்.
இன்று காலை நிலவரப்படி, மத்திய அரசின் தொகுப்பில் இருந்து 3,122 மெகாவாட், தமிழக அனல் மின் நிலையங்களில் இருந்து 4,240 மெகாவாட் உட்பட 11,433 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டிருந்தது. நுகர்வு குறைவாக இருந்ததால் மின் தடை செய்யப்படவில்லை என மின்சார வாரியம் தரப்பில் கூறப்பட்டது.