

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் 28 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பூலோக கயிலாயம் என போற்றப்படுவதும் பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாக கருதப்படுவதுமான சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடந்த 1987-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
28 ஆண்டுகளுக்கு பிறகு, கும்பாபிஷேகப் பணிகள் நடைபெற்று வந்தன. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 22-ம் தேதி மகா கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. 25-ம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
சப்த நதி நீர்
அதைத் தோடர்ந்து, நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி, நேற்று காலை யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடந்தது. தலைமை ஆச்சாரியார் குருமூர்த்தி தீட்சிதர் தலைமையில் 32 ஆச்சாரியார்கள் பங்கேற்று காலை 7 மணி முதல் 8.30 மணிக்குள் ஒரே நேரத்தில் பொன்னம்பலம், சித்சபை மற்றும் நான்கு ராஜ கோபுரங்களிலும் உள்ள கலசங்களுக்கும் ஒரே நேரத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். சப்த நதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீர் ஊற்றப்பட்டது.
காஞ்சி சங்கராச்சாரியார்
விழாவில் வெளிநாடு, வெளிமாநிலங்கள் மற்றும் உள்ளுர் பக்தர்கள் என லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி, தருமபுரம் மடாதிபதி, திருவாவடுதுறை மடாதிபதி, திருப்பனந்தாள் மடாதிபதி மற்றும் இலங்கை அமைச்சர் சுவாமிநாதன், தருண்விஜய் எம்பி, சந்திரகாசு எம்பி, முருகுமாறன் எம்எல்ஏ மற்றும் நீதிபதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இன்று தேர்த் திருவிழா
கும்பாபிஷேகம் முடிந்த பிறகு காலை 11 மணிக்கு பிறகே கோயிலுக்குள் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். விழாவைத் தொடர்ந்து நேற்று இரவில் தெருவடைச்சான் விழா நடைபெற்றது. இன்று (2-ம் தேதி) தேர்த் திருவிழாவும், நாளை (3-ம் தேதி) தரிசன விழாவும் நடைபெற உள்ளது. 4-ம் தேதி பல்லக்கு உற்சவம் நடைபெறுகிறது.