

கொடைக்கானலில் அங்கீகாரம் பெறாத மெட்ரிக். பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அனைத்தும், அதை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான இறுதி தீர்ப்புக்கு கட்டுப்படும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கொடைக்கானலைச் சேர்ந்த பி.ஆர்.ஜெயபாலன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
கொடைக்கானல் நாயுடுபுரத்தில் எனக்கு சொந்தமான இடத்தில் மெட்ரிக். பள்ளி செயல்படுகிறது. சரியாக வாடகை தராததாலும், ஓய்வு விடுதிக்காக கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து பள்ளி நடத்தியதாலும் இடத்தை காலி செய்யும்படி கூறினேன். ஆனால் காலி செய்ய பள்ளி நிர்வாகம் மறுத்தது. நீதிமன்றங்களில் அடுத்தடுத்து வழக்கு தொடர்ந்தேன். அனைத்து வழக்குகளிலும் இடத்தை காலி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
இறுதியாக பள்ளி நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த மனு தள்ளுபடியானதுடன், இடத்தை காலி செய்யவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு வந்து 7 மாதங்களாகியும் இன்னும் இடத்தை காலி செய்யவில்லை.
இந் நிலையில், 2015-16-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை பள்ளி நிர்வாகம் தொடங்கியுள்ளது. எனக்கு சொந்தமான இடத்தில் பள்ளி நடத்த உரிமையில்லை. எனவே, மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்க வேண்டும். பள்ளி நடைபெறுவதை தடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் என்.சதீஷ்பாபு வாதிடும்போது, பள்ளி 2009-ம் ஆண்டில் இருந்து அங்கீகாரம் இல்லாமல் செயல்படுகிறது என்றார்.
விசாரணைக்குப்பின் நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவில், 2009-ம் ஆண்டில் இருந்து அங்கீகாரம் பெறாமல் பள்ளி நடைபெறுவதாகக் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாகவும், உச்ச நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டுள்ளதா?, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நிலுவையில் உள்ளதா? என்பது குறித்து நீதிமன்றத்துக்கு அரசு வழக்கறிஞர் தகவல் தெரிவிக்க வேண்டும். பள்ளியில் நடைபெறும் மாணவர் சேர்க்கை அனைத்தும் இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்படும்.