ஆட்டோக்களில் 5 குழந்தைகளைத்தான் ஏற்ற வேண்டும்: அதிகமாக ஏற்றினால் நடவடிக்கை

ஆட்டோக்களில் 5 குழந்தைகளைத்தான் ஏற்ற வேண்டும்: அதிகமாக ஏற்றினால் நடவடிக்கை
Updated on
1 min read

ஐந்துக்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்லும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் எச்சரித்துள்ளார்.

ஈரோடு வேப்பம்பாளையம் ஏ.இ.டி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, பெருந்துறை ஆகிய வட்டார போக்குவரத்து அலுவலகப் பகுதிகளைச் சார்ந்த கல்வி நிறுவனங்களின் வாகனங்களை மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் நேற்று ஆய்வு செய்தார்.

தொடர்ந்து அவர் கூறும்போது, ‘ஈரோடு கிழக்கு மற்றும் மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களின் பகுதிகளில் உள்ள 55 கல்வி நிறுவனங்களின் 220 வாகனங்களும், பெருந்துறை வட்டாரப் போக்குவரத்து அலுவலகப் பகுதிகளில் உள்ள 47 கல்வி நிறுவனங்களின் 339 வாகனங்களும் என மொத்தம் 102 கல்வி நிறுவனங்களின் 559 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. கல்வி நிறுவனங்களின் வாகனங்களை ஆய்வு செய்வதற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், முதன்மைக் கல்வி அலுவலர், வருவாய் கோட்டாட்சியர், காவல் துறை துணைக்கண்காணிப்பாளர் ஆகியோர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டு இக்குழுவினர் கல்வி நிறுவனங்களின் வாகனங்களை ஆய்வு செய்தனர்.

வாகனத்தின் முன்பக்கம் மற்றும் பின்பக்கத்தில் 60 செ.மீ வட்ட வடிவில் கல்வி நிறுவனத்தின் சின்னம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். வாகனத்தின் பின்புற இடது பக்கம் கல்வி நிறுவனத்தின் முகவரி மற்றும் தொலைபேசி எண் எழுதப்பட்டிருக்க வேண்டும். வாகனத்தின் பின்பகுதி வலதுபுறத்தில் வாகனப் பொறுப்பாளர், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் காவல்நிலையம் ஆகியவற்றின் தொலைபேசி எண்கள் எழுதப்பட்டிருக்க வேண்டும். வாகன ஓட்டுநரின் பகுதி தனியாக பிரிவு செய்திருக்க வேண்டும்.

வாகனத்தின் பின்பக்க வலது புறத்தில் அவரச கால வழி அமைக்கப்பட்டிருக்க வேண்டும். வாகனத்தின் முதலுதவிப் பெட்டி, தீயணைப்பு கருவிகள் ஆகியவைகள் வைத்திருக்க வேண்டும். இத்தகையவைகள் அனைத்தும் வாகனத்தில் உள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

கோபி மற்றும் பவானி வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களின் பகுதிகளைச் சார்ந்த கல்வி நிறுவனங்களின் வாகனங்கள் 30-ம் தேதிக்குள் ஆய்வு செய்யப்பட உள்ளது. ஆட்டோக்களில் பள்ளிக்குழந்தைகள் 5 பேரை மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும். கூடுதலாக பள்ளிக் குழந்தைகள் ஏற்றிச் செல்லும் ஆட்டோக்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வு நிகழ்ச்சியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் லட்சுமணசாமி (ஈரோடு கிழக்கு), ராமலிங்கம் (ஈரோடு மேற்கு), வெங்கடேசன் (பெருந்துறை), முதன்மை கல்வி அலுவலர் பெ.அய்யண்ணன், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் பி.மேனகா, ஏ.இ.டி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் காசியண்ண கவுண்டர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in