

கோவையில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தின் தென் மாநிலங்கள் தலைவர் ரூபேஷை, கர்நாடக மாநிலத்தில் உள்ள வழக்கு தொடர்பாக அந்த மாநில போலீஸார் நேற்று அழைத்துச் சென்றனர்.
கோவை மாவட்டம் கருமத் தம்பட்டி பகுதியில் கடந்த 4-ம் தேதி மாவோயிஸ்ட் இயக்கத்தின் தென்மாநிலங்கள் தலைவர் ஆர்.ரூபேஷ், அவரது மனைவி சைனி, ஜே.அனூப், சி.கண்ணன், சி.வீரமணி ஆகிய 5 பேரை தமிழக கியூ பிரிவு போலீஸார் கைது செய்தனர். அவர்களை 10 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த கியூ பிரிவு போலீஸார், கடந்த 15-ம் தேதி விசாரணையை முடித்துக் கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், கைது செய்யப் பட்டுள்ள ரூபேஷ் மீது கர்நாட கம், கேரளம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் பல்வேறு வழக்கு கள் உள்ளன. அந்த வழக்குகளில் அவரை கைது செய்வதற்கான முயற்சியில் அந்த மாநில போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், கர்நாடக மாநிலம், குடகு மாவட்டம் பொன்னம்மாபேட் காவல் நிலையத்தில், கடந்த 2013-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்கில் ரூபேஷ் தேடப்பட்டுவரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு இருந்தார். தற்போது, அந்த வழக்கில் அவரை கைது செய்து 18-ம் தேதி அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதற்கான கடிதம், அந்த மாநில போலீஸ் சார்பில் கோவை மத்திய சிறை நிர்வாகத்திடம் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, ரூபேஷை அழைத்துச் செல்ல சிறை நிர்வாகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதையடுத்து, சிறையில் இருந்து நேற்று கர்நாடக போலீஸார் அழைத்துச் சென்றனர்.