அரசு விளம்பரங்களில் முதல்வர் படத்துக்கு தடை: மாநிலங்களின் உரிமை காப்பதில் தமிழகம் முன்னிலை

அரசு விளம்பரங்களில் முதல்வர் படத்துக்கு தடை: மாநிலங்களின் உரிமை காப்பதில் தமிழகம் முன்னிலை
Updated on
2 min read

அரசு விளம்பரங்களில் மாநில முதல்வர்கள் படம் இடம்பெறக் கூடாது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மாநிலங்களின் உரிமைகளை காப்பதில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது.

அரசியல் தலைவர்களின் படங்கள், அரசு விளம்பரங்களில் இடம்பெறுவது தொடர்பான பொது நல வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த 13-ம் தேதி முக்கியமான ஒரு தீர்ப்பை அளித்தது. மத்திய, மாநில அரசுகளின் விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரின் படங்கள் இடம்பெறலாம். மாநில முதல்வர் உள்ளிட்ட மற்றவர்களின் படங்கள் இடம்பெறக் கூடாது என அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எல்லா மாநிலங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற போதிலும், இந்தத் தீர்ப்பை எதிர்ப்பதில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. அதிமுக, திமுக உட்பட பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்தத் தீர்ப்பு மாநில சுயாட்சி உரிமைகளுக்கு எதிரானது என பலர் கூறியுள்ளனர்.

இந்நிலையில், மற்ற மாநிலங்களை முந்திக்கொண்டு தமிழகம் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது. இந்தத் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை தமிழக அரசின் வழக்கறிஞர் எம்.யோகேஷ் கண்ணா நேற்று முன்தினம் தாக்கல் செய்துள்ளார். கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராகவும், அரசியலமைப்புச் சட்டம் மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ள உரிமைகளுக்கு மாறாகவும் உள்ள இந்தத் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசின் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சிகரம் ச.செந்தில்நாதன் கூறியதாவது:

அரசு விளம்பரங்கள் குறித்து 2 பொது நல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. மக்களின் வரிப்பணம் விளம்பரங்களில் வீணடிக்கப்படுவதைத் தடுக்க உச்ச நீதிமன்றம் உரிய வழிகாட்டு கோட்பாடுகளை உருவாக்க வேண்டும் என்பது பொது நல வழக்குகளின் கோரிக்கையாகும்.

இப்பிரச்சினை குறித்து ஆய்ந்து, பரிந்துரைகள் அளிக்க தேசிய நீதிமுறை சார்ந்த கழகத்தின் முன்னாள் இயக்குநர் மாதவ மேனன் உள்ளிட்டோரைக் கொண்ட ஒரு குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது. அந்தக் குழு, ‘அரசு விளம்பரங்களில் அரசியல் தலைவர்கள் படம் இடம் பெறுவது தவிர்க்கப்பட வேண்டும். அரசின் தகவல் வலுவாகச் சென்றடைய வேண்டிய அவசியம் இருந்தால் குடியரசுத் தலைவர், பிரதமர் அல்லது ஆளுநர் மற்றும் முதல்வர் படங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும். அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு சாதகமாகவும், ஊடகங்களுக்கு அனுசரணையாக இருக்கும் வகை யிலும் விளம்பரங்கள் இருக்கக் கூடாது’ என்று உச்ச நீதிமன்றத்துக்கு பரிந்துரை அளித்தது.

இதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், சில பரிந்துரைகளில் மாற்றம் செய்தது. அந்த மாற்றம்தான் இப்போது விவாதக் களமாகிவிட்டது. அதாவது குடியரசுத் தலைவர், பிரதமர் படங்கள் விளம்பரத்தில் இடம் பெறுவதை அங்கீகரித்த உச்ச நீதிமன்றம், முதல்வர் மற்றும் ஆளுநரின் படங்கள் படம் இடம் பெறுவதை ஏற்றுக் கொள்ளவில்லை.

அதற்கான எந்தக் காரணத்தையும் உச்ச நீதிமன்றம் கூறவில்லை. அது மட்டுமல்ல. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி படம் விளம்பரங்களில் இடம் பெறுவது பற்றி நிபுணர் குழு எதுவும் கூறாத நிலையில், தலைமை நீதிபதி படம் இடம்பெற என்ன அவசியம் ஏற்பட்டது என்ற கேள்விக்கு தீர்ப்பில் பதில் இல்லை.

மத்திய அரசு போலவே மாநில அரசும் மக்களால்தான் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இதில் வேற்றுமை காட்ட அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் இல்லை. மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் என்ற ஜனநாயகக் கோரிக்கை உரத்த குரலில் பேசப்படும் காலகட்டத்தில் மத்திய அரசிடம் அதிகாரம் குவிவது நல்லது அல்ல.

ஆகவே, இந்தத் தீர்ப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றும்போது, வேறுபாடுகளை எல்லாம் களைய வேண்டும். மாநில அரசுகளின் உரிமைகளை உத்தரவாதப்படுத்தும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும். அதற்காக அனைவரும் போராட வேண்டும்.

இவ்வாறு செந்தில்நாதன் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in