Published : 24 May 2014 09:06 PM
Last Updated : 24 May 2014 09:06 PM

ராஜபக்சே அழைக்கப்பட்டதை தேமுதிக ஏற்கவில்லை - விஜயகாந்த்

நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் நிகழ்ச்சிக்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவை அழைத்திருப்பதை தேமுதிக ஏற்கவில்லை. இதனை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

"பாரத நாடு பல மாநிலங்களை உள்ளடக்கி வேற்றுமையில் ஒற்றுமை கண்டு வருகிறது. பாரதப் பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்கும் விழாவில் இலங்கை அதிபர் ராஜபட்ச கலந்து கொள்ள அழைப்பு விடுத்து இருப்பதை தேமுதிக ஏற்றுக் கொள்ளவில்லை. இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தேமுதிக சார்பில் கேட்டுக் கொள்ளுகிறேன்.

இலங்கையில் நம் தமிழின மக்களை இலங்கை அதிபர் ராஜபட்ச இனப்படுகொலை செய்து, கொன்று குவித்த மாபாதக செயலை எந்த காலத்திலும் மன்னிக்கவும் முடியாது, மறக்கவும் முடியாது. இன்றுவரை தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் தாக்கப்படுவதும், படுகொலை செய்யப்படுவதும் வாடிக்கையாகி வருகிறது. இதற்கு முழு காரணம் ராஜபட்சவின் தலைமையில் உள்ள இலங்கை அரசாகும். இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட வேண்டும் என்ற அடிப்படையில் 2009ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சியினருக்கும் கோரிக்கை விடுத்தேன். அதற்கு யாரும் அப்பொழுது செவி சாய்க்கவில்லை.

இதே காரணத்திற்காக ஜனாதிபதி தேர்தலையும் தேமுதிக புறக்கணித்தது. பிரதமராக இருந்த மன்மோகன் சிங் சென்னை வந்தபோது எனது தலைமையில் கறுப்புக் கொடி காட்ட முயற்சித்து, நானும், என்னுடன் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும் கைது செய்யப்பட்டோம். இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக தேமுதிக பல ஆண்டு காலமாக பல போராட்டங்களை நடத்தியுள்ளது.

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சிக்கு ஆறு மாதங்கள் அவகாசம் கொடுத்திருந்து, அதன் பின்புதான் மக்கள் பிரச்சினைகளை சுட்டிக் காட்டினோம். அதேபோல் புதியதாக பொறுப்பேற்கும் நரேந்திரமோடி ஆட்சிக்கும் ஆறு மாத காலம் அவகாசம் தரப்பட வேண்டும். அதன் பின்புதான் எந்த விமர்சனமாக இருந்தாலும் வைக்கப்பட வேண்டும்.

நரேந்திரமோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இலங்கை அதிபர் ராஜபட்சவை மட்டும் அழைக்கவில்லை. சார்க் நாடுகள் அமைப்பில் உள்ள 8 நாட்டுத் தலைவர்களையும் இந்த விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளது. ஓட்டு மொத்த இந்தியாவின் எதிர்ப்பு நாடான பாகிஸ்தான் உட்பட 8 நாடுகளும் இவ்விழாவில் பங்கேற்பதாக உறுதி அளித்துள்ளனர். ராஜபட்சவை மட்டும் இந்த விழாவிற்கு பங்கேற்க அழைத்திருந்தால் நிச்சயமாக தேமுதிக இவ்விழாவில் பங்கேற்காது.

நரேந்திரமோடியின் ஆட்சி இந்தியாவில் அமைய வேண்டும் என்று தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளேன். அவரை நேரில் சந்தித்தபோது, இலங்கைத் தமிழர் பிரச்சினை, தமிழகத்தில் மீனவர் பிரச்சினை உள்ளிட்ட அனைத்து தமிழக பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதாக என்னிடம் உறுதி அளித்துள்ளார். இதை மீண்டும் அவரிடம் தேமுதிக சார்பில் நான் வலியுறுத்துவேன்”.

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x