

கோயம்பேடு மார்க்கெட்டில் மாங்காய்களை நவீன முறையில் பழுக்க வைப்பதற்கான கூடங்களை அமைக்க வேண்டும் என்று மாம் பழ வியாபாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மாம்பழங்களின் வரத்து அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சீசன் தொடங்கியவுடன் சுகாதாரம் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கோயம்பேடு பழ மார்க்கெட் பகுதியில் சோதனை நடத்துவதும், தடை செய்யப்பட்ட கார்பைடு கற்களைக் கொண்டு பழுக்க வைத்த பல டன் மாம் பழங்களை பறிமுதல்செய்து கொட்டி அழிப்பதும் தொடர்கதை யாக இருந்துவருகிறது.
இது தொடர்பாக பழ வியாபாரி ஒருவர் கூறும்போது, “எங்களுக்கு மாம்பழங்களை பழுக்கவைக்க வேறு தொழில்நுட்பம் தெரியாது. அதனால் கார்பைடு கல்லை பயன் படுத்துகிறோம். அரசு சார்பில் வேறு தொழில்நுட்பத்தை கற்றுக் கொடுத்தால் அதை பின்பற்றப் போகிறோம். பெங்களூர் போன்ற பகுதிகளில் உள்ளது போன்று நவீன பழம் பழுக்க வைக்கும் கூடங்களை அமைக்க அரசிடம் வைத்த கோரிக்கை இதுவரை பரிசீலிக்கப்படவில்லை” என்றார்.
உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “உணவுப் பொருள் கலப்பட தடுப்புச் சட்டம் 1954-ன்படி கார்பைடு கல் மூலம் பழுக்கவைக் கப்பட்ட பழங்களை கொட்டி அழிக் கலாம். ரூ.100 அபராதம் மற்றும் சில தினங்கள் சிறை தண்டனை மட்டுமே வழங்க முடியும். உணவு பாதுகாப்பு சட்டம் 2011-ன்படி பழங்களை கொட்டி அழிப்பதுடன் 5 ஆண்டுகள் வரை சிறை தண் டனையும் கிடைக்க வாய்ப்புள்ளது” என்றார் அவர்.
கோவை வேளாண் பல்கலைக் கழக பேராசிரியர்கள் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், “மாம்பழங்களை பழுக்கவைக்க எத்திலீன் வாயு தேவை. அதற்கு மாற்றாக பயன்படுத் தப்படுவது தான் அசித்திலீன் வாயு. இது கால்சி யம் கார்பைடு கல்லில் இருந்து வெளியாகும். இதை பயன்படுத்த இந்தியாவில் தடை உள்ளது.
உலக அளவில் பாதுகாப்பான கூடங்களை அமைத்து, அதன் வெப்பநிலையை 20 டிகிரி செல்சியஸ் அளவில் நிலை நிறுத்தி, எத்திலீன் வாயுவை செலுத்தி பழங்களை பழுக்கவைக்கும் முறை வரவேற்பை பெற்றுள்ளது. இந்த கட்டமைப்பு வசதி தமிழகத்தில் இல்லை” என்று கூறினார்.
கோயம்பேடு மார்க்கெட்டில் பழம் பழுக்க வைக்கும் நவீன கூடம் அமைக்கப்படுமா என்று மார்க்கெட்டை நிர்வகித்து வரும் சிஎம்டிஏவின் உறுப்பினர் செயலர் ஏ.கார்த்திக்கிடம் கேட்டபோது, “நவீன கூடம் அமைக்க வேண்டும் என இதுவரை என்னிடம் யாரும் வலியுறுத்தவில்லை. யாராவது கோரினால் பரிசீலிக்கப்படும்” என்றார்.
ஜீரண மண்டலம் ஏற்காது
கார்பைடு கல்லால் பழுக்கவைக்கப்பட்ட பழங்களை சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தமிழக பொது சுகாதாரத் துறையின் முன்னாள் இயக்குநர் எஸ்.இளங்கோவிடம் கேட்டபோது, “இயற்கையாக பழுக்கவைக்கப்பட்ட பழங்களை மட்டுமே ஜீரண மண்டலம் ஏற்கும். கார்பைடு கல்லைக் கொண்டு செயற்கையாக பழுக்கவைக்கப்பட்ட பழங்களை ஜீரண மண்டலம் ஏற்காது. இதனால் வயிற்று வலி, வாந்தி, நரம்பு பாதிப்புகள், கருச்சிதைவு போன்ற விளைவுகள் ஏற்படுகின்றன” என்றார்.