Published : 25 May 2015 03:41 PM
Last Updated : 25 May 2015 03:41 PM

கோவை, பொள்ளாச்சி, உடுமலையில் அம்மா உணவகங்கள், மருந்தகங்கள் திறப்பு

கோவையில் அம்மா உணவகம், மருந்தகம் ஆகியவற்றை காணொளிக் காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா நேற்று திறந்து வைத்தார்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோவைப்புதூர் ஆகிய இடங்களில் புதிதாகக் கட்டப்பட்ட அம்மா உணவகங்களை, காணொளிக் காட்சி மூலமாக முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக 144.29 சதுர மீட்டர் பரப்பில் ரூ. 43.90 லட்சம் மதிப்பில் அம்மா உணவகம் கட்டப்பட்டது. கோவைப்புதூர் 90-வது வார்டில் 298.92 சதுரமீட்டர் பரப்பில் ரூ. 30 லட்சம் செலவில் அம்மா உணவகம் கட்டப்பட்டது. பல மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த இந்த உணவகங்கள் தற்போது திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

கோவை வேலாண்டி பாளையம், சிங்காநல்லூர் ஆகிய இடங்களில் கட்டமைக்கப்பட்ட அம்மா மருந்தகங்களும் காணொலி காட்சி மூலமாக நேற்று திறக்கப்பட்டன. அம்மா உணவகங்கள் திறப்பு நிகழ்ச்சியின்போது மேயர் பி.ராஜ்குமார், மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக், மாநகராட்சி துணை ஆணையர் பி.காந்திமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி நகராட்சியில், தற்காலிக நகராட்சி அலுவலகம் செயல்படும் பள்ளி வளாகத்தில் கடந்த ஆண்டு அம்மா உணவகம் கட்டப்பட்டது. அரசு நிதி ரூ.25 லட்சம், நகராட்சி சார்பில் ரூ.25 லட்சம் செலவிடப்பட்டு, இந்த உணவகம் கட்டப்பட்டது. பல மாதங்களாக திறப்பு விழா காணாமல் பூட்டி வைக்கப்பட்டிருந்தது.

முதல்வர் ஜெயலலிதா சென்னையிலிருந்து காணொளில் காட்சி மூலமாக பொள்ளாச்சி அம்மா உணவகத்தை திறந்து வைத்தார். பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன், சட்டப்பேரவை உறுப்பினர் முத்துக்கருப் பண்ணசாமி, நகராட்சித் தலைவர் வி.கிருஷ்ணகுமார், ஆணையாளர் அ.சுந்தராம்பாள், மண்டல செயற்பொறியாளர் (திருப்பூர்) எஸ்.திருமாவளவன், மண்டல உதவி திட்ட அலுவலர் (திருப்பூர்) ராதாகிருஷ்ணன், நகராட்சிப் பொறியாளர் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அரசு மருத்துவமனை வளாகத்தை ஒட்டி, அம்மா உணவகம் கட்டப்பட்டுள்ளதால், பொதுமக்களுக்கும், நோயாளி களுக்கும் மிகுந்த பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உணவகத்தில் காலை வேளையில், ரூ.1-க்கு ஒரு இட்லி வீதம் நான்கு இட்லிகளும், மதியம் ரூ.5-க்கு சாம்பார் சாதமும், ரூ.3-க்கு தயிர் சாதமும் வழங்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அம்மா உணவகத் திறப்புவிழாவை யொட்டி, வடக்கு, தெற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களின் வளாகத்தில் உள்ள அம்மா மருந்தகங்களும் திறக்கப்பட்டன.

aஉடுமலை

உடுமலை நகராட்சி சார்பில் ரூ.25 லட்சம் செலவில் கட்டப்பட்ட ‘அம்மா’உணவக திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

நாளொன்றுக்கு காலை ஆயிரத்து 500 இட்லியும், மதியம் சாம்பார், தயிர் சாதமும் வழங்கப்படும். காலை 7 முதல் 10 மணி வரையும், பகல் 12 முதல் 3 மணி வரையும் உணவகம் செயல்படும். இதனை செயல்படுத்த பசுமை மகளிர் சுயஉதவி குழுவைச் சேர்ந்த 20 பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

நகர்மன்றத் தலைவர் கே.ஜி.எஸ்.ஷோபனா, ஆணையர் கே.சரவணக்குமார், கோட்டாட்சியர் அ.சாதனைக்குறள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x