

சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே.நகர்) தொகுதி அதிமுக எம்எல்ஏ பி.வெற்றிவேல் தனது பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்தார்.
அவரது ராஜினாமாவை பேரவைத் தலைவர் உடனடியாக ஏற்றுக்கொண்டுள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா போட்டியிடுவதற்காகவே வெற்றிவேல் ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ராஜினாமா குறித்து 'தி இந்து' சார்பில் வெற்றிவேலிடம் பேசியபோது, "எல்லாம் அம்மாவுக்காகவே" என்று மட்டும் கூறினார்.
அதிமுகவுக்கு சாதகமான ஆர்.கே.நகர் தொகுதி:
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிடக்கூடும் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
1977-ல் ஆர்.கே.நகர் தொகுதி உருவானது முதல் 2011 வரை நடை பெற்ற 9 தேர்தல்களில் அதிமுக 5 முறையும், திமுக, காங்கிரஸ் தலா 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
1977-ல் அதிமுக வேட்பாளர் ஐசரி வேலன் 28,416 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் 1991-ல் இங்கு 66,710 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட பி.கே.சேகர் பாபு 2001-ல் 74,888 வாக்குகளும், 2006-ல் 84,462 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றார். தற்போது திமுக துணைப் பொதுச் செயலாளராக இருக்கும் எஸ்.பி.சற்குணபாண்டியன் 1989-ல் 54,216 வாக்குகளும், 1996-ல் 75,125 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2011 தேர்தலில் வெற்றிவேல் (அதிமுக) 83,777 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
திமுகவின் கோட்டையாக இருந்த சென்னையில் அதிமுக வுக்கு முதல் வெற்றியைத் தந்த தொகுதி ஆர்.கே.நகர் என்பது குறிப்பிடத்தக்கது.
208 வாக்குச் சாவடிகள்:
ஆர்.கே.நகர் தொகுதியில் 208 வாக்குச் சாவடிகள் உள்ளன. தண்டையார்பேட்டை, கொருக்குப் பேட்டை, பழைய வண்ணாரப் பேட்டை, புதிய வண்ணாரப் பேட்டை, கொடுங்கையூர், தண்டை யார்பேட்டை, ராயபுரம் ஆகிய பகுதி கள் இத்தொகுதியில் அடங்கியுள்ளன. அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைப் பொருத்தவரை, இப்பகுதிகள் சென்னை மாநகரின் பின் தங்கிய பகுதிகளாகவே உள்ளன.
2.40 லட்சம் வாக்காளர்கள்:
கடந்த ஜனவரி 5-ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக் காளர் பட்டியலின்படி ஆர்.கே.நகர் தொகுதியில் ஆண்கள் 1 லட்சத்து 18 ஆயிரத்து 960 பேர், பெண்கள் 1 லட்சத்து 21 ஆயிரத்து 508 பேர், இதரர் 75 பேர் என மொத்தம் 2 லட்சத்து 40 ஆயிரத்து 543 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களைவிட 2,548 பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். தற்போது வாக்காளர் பட்டியலில் சேர்க்கை, நீக்கம், திருத்தம் செய்யும் பணிகள் நடந்துவருவதால் மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் மாற்றங்கள் இருக்கும்.
பரப்பளவில் சிறிய தொகுதி. மேலும், தலைநகரிலேயே இருப்பதால் பிரச்சாரம் செய்வது எளிது. பெண் வாக்காளர்கள் அதிகம். எனவே, ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிடக்கூடும் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.