

சீனாவில் உள்ள சாங்கிங் நகருடன் சென்னை மாநகராட்சி ‘சகோதரி நகரம்’ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் இரு நகரங்கள் இடையே கல்வி, கலாச்சாரம், உள்கட்ட மைப்பு மேலாண்மை தொழில்நுட்பம் போன்றவற்றை பரிமாறிக் கொள்ள முடியும். பிரதமர் நரேந்திர மோடியின் சீன பயணத்தின்போது கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களில் இதுவும் ஒன்றாகும்.
மேற்கு சீனாவில் உள்ள முக்கிய நகரம் சாங்கிங். சீன மத்திய அரசின் நேரடி நிர்வாகத்தில் உள்ள 4 நகரங்களில் ஒன்று. இங்கு ‘ஒரு மணிநேர பொருளாதார வட்டம்’ என்ற திட்டம் அமலில் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் உள்ள 23 கோட்டங்களில் இருந்து ஏதாவது ஒரு போக்குவரத்து மூலமாக ஒரு மணிநேரத்துக்குள் நகரத்தின் மையத்தை சென்றடைய முடியும்.
பொருளாதார ரீதியாக இந்த பகுதிகளை வளர்ப்பதில் நகர நிர்வாகம் கவனம் செலுத்துகிறது. எனவே இப்போது போடப்பட்டுள்ள ஒப்பந்தம், சென்னையின் உள்கட்டமைப்புகள், பொருளாதாரம் வளர வழி வகுக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘‘சாங்கிங் நகரின் உள்கட்டமைப்பு வசதிகள், ஆறுகள் பராமரிப்பு, திடக்கழிவு மேலாண்மை ஆகியவற்றின் தொழில்நுட்ப பரிமாற்றம் சென்னை மாநகருக்கு மிகவும் உதவியாக இருக்கும். அது தவிர கலாச்சார உறவுகளும் மேம்படுத்தப்படும்’’ என்றனர்.
‘சகோதரி நகரங்கள்’ என்ற ஒப்பந்தம் இரு வேறு நாடுகளில் உள்ள இரு நகரங்கள் இடையே கலாச்சார, பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்காக போடப்படுகிறது. சென்னை மாநகராட்சி ஏற்கெனவே அமெரிக்காவின் சான் ஆன்டானியோ நகரத்துடன் ‘சகோதரி நகரமாக’ உள்ளது.
சான் ஆன்டானியோவில் இருந்து கடந்த ஆண்டு கூடைப் பந்து வீரர்கள் சென்னைக்கு வந்து மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு கூடைப்பந்து பயிற்சி அளித்தது குறிப்பிடத்தக்கது.