Last Updated : 28 May, 2015 08:35 AM

 

Published : 28 May 2015 08:35 AM
Last Updated : 28 May 2015 08:35 AM

திமுக, விடுதலைச் சிறுத்தைகள் புறக்கணிப்பு: ஆர்.கே.நகரில் போட்டியிட தயங்கும் எதிர்க்கட்சிகள்

ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலை திமுகவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் புறக்கணித் துள்ள நிலையில் மற்ற எதிர்க் கட்சிகளும் போட்டியிட தயக்கம் காட்டி வருகின்றன.

ஆர்.கே.நகர் தொகுதியில் ஜூன் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமி ஷன் அறிவித்துள்ளது. இங்கு முதல்வர் ஜெயலலிதா போட்டி யிடுவார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த இடைத்தேர் தலில் திமுக போட்டியிடாது என அக்கட்சியின் தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் தங்கள் கட்சி இந்த இடைத் தேர்தலை புறக்கணிக்கும் என்று கூறியுள்ளார்.

இது குறித்து ‘தி இந்து’ விடம் பேசிய அவர், “தமிழகத் தைப் பொறுத்தவரை இடைத் தேர்தல்களில் ஆளுங்கட்சியின் ஆதிக்கம் அதிகமாக இருந்து வருகிறது. எனவே, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. இதே காரணத்துக்காகவே ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலையும் புறக்கணித்தோம்” என்றார்.

மற்ற கட்சிகளின் நிலை

ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் ‘தி இந்து'விடம் கூறியதாவது:

தமிழிசை சவுந்தரராஜன் (தமிழக பாஜக தலைவர்):

கோவை, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் இடைத்தேர்தல், ரங்கம் இடைத் தேர்தலில் ஆளுங்கட்சியின் பணபலம், அதிகார பலத்தை எதிர்த்து பாஜக களமிறங்கியது. எனவே, தேர்தலைக் கண்டு பாஜக ஒருபோதும் அஞ்சியதில்லை. மோடி அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஆர்.கே.நகரில் 28-ம் தேதி (இன்று) நடைபெறுகிறது. அதன் பிறகு கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்து ஆர்.கே. நகரில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்வோம்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் (தமிழக காங்கிரஸ் தலைவர்):

தமிழகத்தில் இடைத்தேர்தல் எப்படி நடைபெறுகிறது என்பதை எல்லோரும் அறிவோம். வரும் ஜூன் 3-ம் தேதி நடைபெறும் மாநில செயற்குழுவில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து முடிவு செய்வோம்.

ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர்):

தேர்தல் பற்றிய அறிவிப்பு இப்போதுதான் வந்துள்ளது. ஆர்.கே.நகரில் போட்டியிடுவதா? வேண்டாமா? என்பதை கட்சியின் மாநில செயற்குழுவில் விவாதித்து முடிவு செய்வோம்.

இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர்):

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. கட்சியின் நிர்வாகக் குழுவில் விவாதித்து விரைவில் முடிவு செய்வோம்.

தேமுதிகவின் முடிவு என்னவாக இருக்கும் என்று அக்கட்சியின் எம்.எல்.ஏ. ஒருவரிடம் கேட்டபோது, இதுகுறித்து கட்சித் தலைவர் விஜயகாந்த்தான் முடிவு செய்வார். பாஜகவின் முடிவை பொறுத்து தேமுதிகவின் முடிவு மாறலாம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x