

மாதனூரை அடுத்த பாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்ன பையன் (40). ஒன்றிய பாமக முன்னாள் செயலாளர். கடந்த 26-ம் தேதி இரவு மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக ஆம்பூர் தாலுகா காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: சின்னபையனுக்கு செம்மரக் கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளது. இவருக்குச் சொந்தமான கோழிப் பண்ணையில் செம்மரக் கட்டைகளை பதுக்கி வைத்து பார்சல் அனுப்புவார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவரிடம் சத்துவாச்சாரியைச் சேர்ந்த நாகேந் திரன், அவரது மனைவி ஜோதி லட்சுமி ஆகியோர் 4 டன் செம்மரக் கட்டைகளை பார்சல் அனுப்பக் கொடுத்துள்ளனர்.
சில நாட்கள் கழித்து, பார்சலுக் காக வைத்திருந்த செம்மரக் கட்டை களை போலீஸார் பறிமுதல் செய்து விட்டதாகக் கூறி நாகேந்திரனை சின்ன பையன் ஏமாற்றியுள்ளார். இதற்கிடையில், மாதனூரை அடுத்த திருமலைக்குப்பத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர், 7 டன் செம்மரக் கட்டையை பார் சல் அனுப்பும்படி சின்ன பையனி டம் கூறியுள்ளார். இதனை தெரிந்துகொண்ட நாகேந்திரன், வேலூர் மாவட்ட கலால் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் தங்கவேலுவின் உதவியை நாடியுள்ளார். கலால் பிரிவு தலைமைக் காவலர்கள் சாமுவேல், சவுந்தர்ராஜன், ஆயுதப்படை காவலர்கள் ராஜேஷ், சீனிவாசன் ஆகியோருடன் சில நாட்களுக்கு முன்பு சின்ன பையனின் கோழிப் பண்ணைக்கு தங்கவேலு சென்றார். அங்கு நடத்திய சோதனையில் 7 டன் செம்மரத்தை பறிமுதல் செய்து நாகேந்திரனிடம் கொடுத்துள்ளார்.
செம்மரத்தை பெற்றுக்கொண்ட நாகேந்திரன், அதில் சுமார் 3 டன் செம்மரத்தை பெங்களூருவைச் சேர்ந்த கும்பலுக்கு விற்றுள்ளார். மீதம் இருந்த செம்மரக் கட்டை களை தனது வீட்டில் பதுக்கி வைத்துள்ளார்.
இதற்கிடையில், செம்மரத்தை பறிகொடுத்த வெங்கடேசன் கடந்த 26-ம் தேதி இரவு சின்ன பையனை தனது கூட்டாளிகளான திருவண்ணாலையைச் சேர்ந்த பெருமாள் (27), தங்கராஜ் (25), சத்தியமூர்த்தி (27) ஆகியோர் உதவியுடன் கொலை செய்துள்ளார். சின்ன பையனின் செல்போனில் இருந்த அழைப்புகள் குறித்து ஆய்வு செய்ததில் இந்த உண்மை தெரியவந்தது.
நாகேந்திரன் வீட்டில் நடத்திய சோதனையில் அங்கு பதுக்கி வைத்திருந்த 3.5 டன் செம்மரக் கட்டைகள், ரூ.32 லட்சம் ரொக்கப் பணம், 3 கார்கள் பறிமுதல் செய்யப் பட்டன. இது தொடர்பாக நாகேந் திரன், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி ஜோதி லட்சுமி கைது செய்யப்பட்டுள்ளனர்.
செம்மரக் கடத்தல் கும்பலுக்கு உடந்தையாக இருந்தது குறித்து 4 போலீஸாரிடம் விசாரணை நடக்கிறது. இதன் முடிவில் கலால் பிரிவு துணை காவல் கண்காணிப் பாளர் தங்கவேலுவின் பங்களிப்பு மற்றும் மற்ற போலீஸாரின் செயல்கள் உறுதிப்படுத்தப்படும். தலைமறைவாக உள்ள டிஎஸ்பியைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
சத்துவாச்சாரி புதுவசூரில் உள்ள தங்கவேலு தங்கியிருந்த வீட்டில் போலீஸார் சோதனையிட்டதில் சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.