Last Updated : 28 May, 2014 09:31 AM

 

Published : 28 May 2014 09:31 AM
Last Updated : 28 May 2014 09:31 AM

வண்ணாரப்பேட்டை - விமான நிலையம் குளுகுளு மெட்ரோ ரயிலில் ரூ.40 கட்டணம்: கட்டண நிர்ணயக் குழு முடிவு

சென்னை வண்ணாரப்பேட் டையில் இருந்து விமான நிலையத்துக்கு குளுகுளு மெட்ரோ ரயிலில் ரூ.40 கட்டணம் வசூலிக்கலாம் என கட்டண நிர்ணயக் குழு முடிவு செய்துள்ளது. இது பற்றிய விவரம் மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறினார்.

சென்னையில் ரூ.14,600 கோடி செலவில் இரு வழித்தடங்களில் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடந்துவருகின்றன. கட்டுமானப் பணிக்கான செலவு அதிகரிப்பு, இதர பொருட்கள் விலை உயர்வு காரணமாக திட்ட மதிப்பீடு ரூ.20 ஆயிரம் கோடியை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக வரும் அக்டோபர் இறுதியில் கோயம்பேடு ஆலந்தூர் இடையே 10 கி.மீ. தூரத்துக்கு பறக்கும் பாதையில் குளுகுளு மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் ஆரம்பமாகிவிட்டன.

தொடக்க விழா எப்போது?

கோயம்பேடு ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்த பாதையில் தெற்கு ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் வரும் அக்டோபரில் சோதனை நடத்தவுள்ளார். அவர் அறிக்கை கிடைத்ததும், மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடக்க விழா தேதி இறுதி செய்யப்படும்.

இதற்கிடையில், மெட்ரோ ரயிலில் பயணம் செய்வ தற்கான கட்டணம் இறுதி செய்யப்பட்டு, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் 3 இயக்குநர்கள், தமிழக நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள், டெல்லி மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சக அதிகாரி ஆகியோரைக் கொண்ட மெட்ரோ ரயில் கட்டண நிர்ணயக் குழு, பல கட்டங்களாக ஆலோசனை நடத்தி மெட்ரோ ரயிலில் பயணம் செய்வதற்கான கட்டணத்தை இறுதி செய்துள்ளது.

அதன்படி, சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரை செல்ல (24 கி.மீ.) ரூ.40 கட்டணம் நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டிருக்கிறது. குறைந்தபட்ச கட்டணம் ரூ.10. அதற்கு அடுத்தபடியாக ரூ.15, ரூ.20, ரூ.25 என முழுத்தொகையாகவே கட்டணம் வசூலிக்கப்படும்.

சென்னை மெட்ரோ ரயிலுக் கான கட்டண விவரம் ஆகஸ்ட்டில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப் படும்.

40 நிமிடத்தில் போய்விடலாம்

ஒரு நிலையத்தில் இருந்து புறப்பட்டு ஒன்று முதல் 2 கி.மீ. தூரத்தில் அடுத்த நிலையம் வந்துவிடும் என்பதால் மணிக்கு 34 கி.மீ. வேகத்தில் மெட்ரோ ரயிலை இயக்கத் திட்டமிட்டுள்ளோம். அதன்படி, வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையத்துக்கு 40 நிமிடங்களில் போய்ச்சேர முடியும். சிக்னல், கிராசிங் இடையூறுகள் இல்லை என்பதால் தாமதமின்றி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

இவ்வாறு மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x