

பெண் டாக்டரின் கழுத்தை நெறித்து கொலை செய்தவரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை முகப்பேர் அருகே நொளம்பூர் வெள்ளாளர் தெருவில் வசிப்பவர் சங்கர்(35). தி.நகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பொறியாளராக இருக்கிறார். இவரது மனைவி சங்கீதா (32). பல் மருத்துவர். இவர் நொளம்பூரில் கிளினிக் நடத்தி வந்தார். இவர்களுக்கு தியானஸ்ரீ(2) என்ற பெண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் காலையில் சங்கர் வேலைக்கு சென்று விட்டார். சங்கீதா கிளினிக் சென்றார். அன்று மதியம் அவர் வீட்டுக்கு சாப்பிட வரவில்லை.
இதைத் தொடர்ந்து வீட்டில் வேலை செய்யும் பெண் சங்கீதாவைத் தேடி கிளினிக்குக்கு சென்றார். அங்கு சங்கீதா தனது இருக்கையிலேயே இறந்து கிடந்தார். அவரது கழுத்து துப்பட்டாவால் இறுக்கப் பட்டிருந்தது. அவர் அணிந்தி ருந்த 15 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். கொலை நடந்த நேரத்தில் சந்தேகத் துக்குரிய ஒரு நபர் நடந்து செல் வது அதில் தெரிந்தது. மேலும் தன்னிடம் சிகிச்சைக்கு வருபவர் களின் விவரங்களை சங்கீதா ஒரு டைரியில் எழுதி வைப்பது வழக்கம். அந்த டைரியை ஆய்வு செய்தபோது, ஆவடி கோவில் பதாகை பகுதியை சேர்ந்த நல்லுசாமி(38) என்பவர் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து வந்திருப்பது தெரிந்தது.
இதைத்தொடர்ந்து போலீஸார் உடனடியாக கோவில் பதாகை சென்று நல்லுசாமியை பிடித்து விசாரித்தனர். அப்போது சங்கீ தாவை அவர் கொலை செய்தது தெரியவந்தது. அவரிடம் இருந்த நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
சங்கீதாவிடம் சிகிச்சை பெற வந்த நல்லுசாமி, அவர் தனியாக இருப்பதைப் பார்த்து அவரை கொன்று நகைகளை கொள்ளையடிக்க திட்டமிட்டுள் ளார். அதன்படி நோயாளி போல வந்து, டாக்டர் சங்கீதாவின் கழுத்தை துப்பட்டாவால் இறுக்கி கொன்று நகைகளை கொள்ளையடித்துள்ளார் என்று போலீஸார் தெரிவித்தனர்.