Published : 26 May 2015 07:38 AM
Last Updated : 26 May 2015 07:38 AM

வீடு இடிந்து குழந்தை உட்பட மூவர் மரணம்

தூத்துக்குடி மட்டக்கடை முத்துசாமி தெருவைச் சேர்ந்தவர் தங்கவேல்(38). அந்த பகுதியில் சோடா கம்பெனி நடத்தி வந்தார். இவரது மனைவி ராஜலெட்சுமி (35). இவர்களது ஒன்றரை வயது குழந்தை ஜனனி. தங்கவேல் தம்பதிக்கு திருமணமாகி 8 ஆண்டுகளுக்கும் மேலாக குழந்தை இல்லை. சில மாதங்களுக்கு முன்புதான் ஜனனியை தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.

இவர்கள் வசித்து வந்த வீடு சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தரை தளத்தில் 3 பகுதி களும், மாடியில் 3 பகுதிகளுமாக வீடு இருந்தது. நேற்றுமுன்தினம் இரவு தங்கவேல், ராஜலெட்சுமி மற்றும் குழந்தை ஜனனி ஆகியோர் தரைதளத்தில் மைய பகுதியில் உள்ள அறையில் தூங்கிக்கொண் டிருந்தனர். தங்கவேலின் தாயார் லெட்சுமி (75), சகோதரி முத்து (40) ஆகியோர் மாடியில் தூங்கிக்கொண்டிருந்தனர்.

நேற்று காலை 5.10 மணியளவில் மாடி வீட்டின் மையப்பகுதி மேற்கூரை திடீரென இடிந்து தரை தள மேற்கூரை மீது விழுந்தது. இதனால் தரை தளத்தின் மேற்கூரையும் இடிந்து விழுந்தது. தங்கவேல், ராஜலெட்சுமி, ஜனனி ஆகியோர் இடிபாடுகளுக்கிடையே சிக்கிக் கொண்டனர். மாடியில் லெட்சுமி, முத்து ஆகியோர் தூங்கிக் கொண்டிருந்த பகுதி எந்த சேதமும் அடையவில்லை.

மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையில் தீயணைப்பு படையினர் மற்றும் எஸ்.பி. அஸ்வின் கோட்னீஸ் தலைமையில் போலீஸார் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 2 மணி நேரத்துக்குப் பிறகு தங்கவேல், ராஜலெட்சுமி, குழந்தை ஜனனி ஆகிய மூவரையும் சடலமாகதான் மீட்க முடிந்தது. பலியானோரின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது. தூத்துக்குடி வடபாகம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x