

சென்னை வியாசர்பாடியில் ரூ.95 கோடி செலவில் மின் தூக்கி வசதியுடன் கூடிய அடுக்கு மாடி குடியிருப்பை குடிசை மாற்று வாரியம் அமைக்க உள்ளது.
வியாசர்பாடி மூர்த்திங்கர் தெருவில் குடிசை மாற்று வாரியத்துக்கு சொந்தமான இடம் உள்ளது. அதில் 900-த்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிக குடியிருப்புகள் அமைத்து வசித்து வருகின்றனர். அப்பகுதி மிகவும் தாழ்வான பகுதி என்பதால் மழை காலங்களில் வீடுகளைச் சுற்றி நீர் தேங்கி, பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
குடியிருப்புகளை உயரமாக அமைத்துக்கொள்வதற்காக தங்களுக்கு இலவச மனை பட்டா வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அரசு கடந்த 1985-ல் எடுத்திருந்த கொள்கை முடிவின் படி சென்னை மாநகராட்சி எல்லைக்குள் யாருக்கும் மனைப் பட்டா வழங்குவதில்லை.
இந்நிலையில், அங்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் மின் தூக்கி வசதியுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பு கட்ட திட்டமிடப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மூர்த்திங்கர் தெரு இடம்பெற்றுள்ள 46-வது வார்டு மாமன்ற உறுப்பினர் டி.சரவணனிடம் கேட்டபோது, ‘‘அரசின் முடிவின்படி அடுக்கு மாடி குடியிருப்பு கட்டுவதற்காக அப்பகுதியில் வசிக்கும் குடும்பங்கள் கணக்கெடுக்கப்பட்டு 960 குடும்பங்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் தற்காலிகமாக முல்லை நகர் பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. அடுக்குமாடி குடியிருப்பு பணிகள் முடிந்ததும் அவர்களிடம் ஒப்படைக்கப்படும்’’ என்றார் அவர்.
இது தொடர்பாக குடிசை மாற்று வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘அடுக்கு மாடி குடியிருப்பு கட்டுவதற்காக அரசு சார்பில் ரூ.95 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியைக் கொண்டு மாநகராட்சி எல்லைக்குள் முதல்முறையாக மின் தூக்கி வசதியுடன் கூடிய அடுக்கு மாடி குடியிருப்பை கட்ட இருக்கிறோம். ஒவ்வொரு குடியிருப்பும் ஒரு படுக்கை வசதியுடன் கூடிய 400 சதுரடி பரப்பளவு கொண்டது. தரை தளம் மற்றும் 7 மாடிகளில் மொத்தம் 960 குடியிருப்புகள் அமைக்கப்பட உள்ளன. இப்பணி 18 மாதங்களில் முடிக்கப்படும். தற்போது நிலத்தை சமன் படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன’’ என்றார்.