

திருவள்ளூர் மாவட்டத்தில் வீடு மற்றும் தெருக்களில் வசிக்கும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, ஜூன் 30-ம் தேதிக்குள் காப்பகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மனநலம் பாதிக்கப் பட்டவர்களை மீட்டு மனநல மருத்துவமனை மற்றும் மறு வாழ்வு மையங்களில் சேர்ப்பது குறித்து காவல்துறை, பிற துறைகளின் அலுவலர்கள் மற்றும் மனநல காப்பக தொண்டு நிறுவனங்களுக்கான விழிப்புணர்வு முகாம் நேற்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.
புது வாழ்வு திட்டம் மற்றும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து நடத்திய இந்த முகாமில் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், திருவள்ளூர் சார் ஆட்சியர் ராகுல் நாத், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், மன நல மருத்துவ ஆணைய உறுப்பினர் மற்றும் செயலர் டாக்டர் மலையப்பன், மன நல மருத்துவர்கள் லட்சுமி, பகதூர் மொய்தீன் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
முகாமில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் உறவினர்கள் பாதுகாப்பில் இருப்பதைவிட காப்பகத்தில் இருப்பதே நல்லது. எனவே வீடுகள் மற்றும் தெருக்களில் சுற்றித் திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவ பரிசோதனை செய்து காப்பகத்தில் ஒப்படைக்க வேண்டும். இதை, வரும் ஜூன் 30-ம் தேதிக்குள் காவல்துறை, சமூக நலத்துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, புது வாழ்வுத் திட்டம் உள்ளிட்ட துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.