பொறியியல் கல்லூரிகள் தரம் கவலை அளிக்கிறது: ஸ்டாலின்

பொறியியல் கல்லூரிகள் தரம் கவலை அளிக்கிறது: ஸ்டாலின்
Updated on
1 min read

பொறியியல் கல்லூரிகளில் கல்வித்தரத்தை உயர்த்த ஐஐடி வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்கள் தலைமையில் குழு அமைக்க வேண்டும் என திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஸ்டாலின் இன்று எழுதியுள்ள முகநூல் பதிவில், ''அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் தரம் குறைந்து வருவது கவலையளிப்பதாக இருக்கிறது.

2014-ஆம் ஆண்டு நவம்பர்-டிசம்பர் செமஸ்டர் தேர்வெழுதிய பொறியியல் மாணவர்களில் 47 சதவீதம் பேர் தேர்ச்சி பெறவில்லை என்று தெரியவருகிறது. 205-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் 40 சதவீதத்திற்கும் கீழாகவும், 58 கல்லூரிகளில் 20 சதவீதத்திற்கும் குறைவாகவுமே மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சிலின் விதிமுறைகளுக்கு மாறாக ஆசிரியர்கள் பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணிபுரிவதாக சமீபத்திய ஆய்வொன்று தெரிவிக்கிறது.

இந்நிலையில், துணை வேந்தர்களை நியமிப்பதில் மட்டும் முனைப்பு காட்டும் அதிமுக அரசு பொறியியல் கல்லூரிகளில் அளிக்கப்படும் கல்வியின் தரத்தை மேம்படுத்த துளி கூட அக்கறை காட்டுவதாக தெரியவில்லை.

பொறியியல் கல்வி என்பது இளைய தலைமுறையினரின் எதிர்காலம் என்பதையும், வேலைவாய்ப்பு என்பது அவர்கள் பெறும் கல்வித்தரத்துடன் நேரடியாக தொடர்புடையது என்பதையும் அதிமுக அரசு உணர வேண்டும்.

எனவே, ஐஐடி வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்கள் கொண்ட உயர்மட்ட குழு ஒன்றை உடனே அரசு அமைத்து, மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்தது பற்றி தீர விசாரிக்க வேண்டும்.பொறியியல் கல்லூரிகளின் தரத்தை உயர்த்த தேவையான ஆலோசனைகளை அக்குழுவிடமிருந்து பெற்று, அவற்றை செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in