

காசிமேட்டில் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற 5 மீனவர்கள் கரை திரும்பவில்லை. அவர் களை தேடும் பணி தொடங்கி யுள்ளது.
சென்னை காசிமேடு ஜீவ ரத்தினம் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் கடும்பாடி, மாயாண்டி, சக்திவேல், மணி, சுரேஷ். இவர்கள் 5 பேரும் பைபர் படகில் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர். நேற்று முன்தினம் மதியம் 2 மணிக்கு சென்றவர்கள் அன்றிரவு 12 மணிக்கு கரை திரும்பியிருக்க வேண்டும். ஆனால், நேற்று மாலை வரை அவர்கள் கரை திரும்பவில்லை.
இதுகுறித்து மீன் வளத் துறைக்கும், கடலோர காவல் படைக்கும் மீனவர்கள் தகவல் கொடுத்தனர். துறைமுகம் காவல் நிலையத்திலும் புகார் கொடுத்தனர்.
மாயமான மீனவர்களை தேடும் பணியில் அதிகாரிகள் யாரும் ஈடுபட்டதாக தெரியவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மீனவர்கள் காசிமேடு சிக்னல் அருகே சூரிய நாராயணா செட்டி தெருவில் நேற்று மாலை மறியல் செய்தனர்.
மீனவர் மக்கள் முன்னணி தலைவர் ஜெ.கோசுமணி உட்பட 300-க்கும் மேற்பட்ட வர்கள் மறியலில் கலந்து கொண்டனர்.
அவர்களிடம் போலீஸார் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட வைத்தனர். அதைத் தொடர்ந்து மீனவர்களிடம் பேசிய கடலோர காவல் படை அதிகாரிகள், மாயமான 5 பேரையும் தேடு வதாக தெரிவித்தனர். அதன் படி, ஹெலிகாப்டர் மற்றும் கடலோர காவல் படை கப்பல் மூலம் மீனவர்களை தேடும் பணி நேற்று மாலையே தொடங்கியது.
விசைப்படகில் சென்று தேடப் போவதாக மீனவர்கள் கூறினர். தற்போது மீன் பிடி தடை காலம் அமலில் இருப்பதால் விசைப்படகுகள் கடலுக்குள் செல்லக்கூடாது என்று கூறி, அதிகாரிகள் அனுமதி மறுத்துவிட்டனர்.